ஆந்திராவில் ஆன்லைன் ரம்மிக்கு தடை- மீறினால் 2 ஆண்டு சிறை!!! காரணம் தெரியுமா???
- IndiaGlitz, [Friday,September 04 2020]
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி, போக்கர் போன்ற சில விளையாட்டுகளுக்கு தடைவித்து உத்தரவிட்டு இருக்கிறார். இந்தத் தடை உத்தரவை மீறி விளையாடும் நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.
ஆன்லைன் கேம்களை விளையாடும்போது இளைஞர்கள் பெட் வைத்து விளையாடுவதாகவும் இப்படி பெட் கட்டுவதற்கு அமைப்புகளும் இயங்குவதாக அம்மாநிலத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அம்மாநில அரசு தடை விதித்து அதிரடி உத்தரவிட்டு இருக்கிறது.
நேற்று ஆந்திர மாநில மந்திரிசபை கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப் பட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது. இதுதொடர்பாகக் கருத்துக் கூறிய அம்மாநில தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி வெங்கடராமையா ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதுடன் அவர்களது வாழ்க்கையை பாழ்ப்படுத்தி விடுகிறது. எனவே இளைஞர்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
இத்தடையை மீறும் சூதாட்ட அமைப்பாளர்களுக்கு முதல் தடவை ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல அடுத்த முறையும் தவறு செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் தடையை மீறி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை விளையாடினால 6 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்ற கடுமையான அறிவிப்பை ஆந்திரா அரசு வெளியிட்டு இருக்கிறது.