ஆந்திர வெள்ளம்… நிவாரணத் தொகை அறிவித்த சினிமா பிரபலங்கள்!

சமீபத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண், ஜுனியர் என்டிஆர், மகேஷ்பாபு ஆகியோர் தலா ரூ.25 லட்சம் வழங்க முன்வந்துள்ளனர்.

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆந்திராவில் நிலைக் கொண்டதால் திருப்பதி, சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தப்பூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

மேலும் திருப்பதியொட்டி ஆங்காங்கே மண் சரிவுகளும் ஏற்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல சித்தூர் நீவா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பால் பலர் ஆடு, மாடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக தெலுங்கு பிரபலங்கள் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் இருவரும் 25 லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க முன்வந்துள்ளனர். அதேபோல தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்துவரும் மகேஷ் பாபு மற்றும் ஜுனியர் என்டிஆர் இருவரும் தலா ரூ.25 லட்சம் நன்கொடை வழங்க உள்ளதாக அறிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.