முதலிரவுக்கு சில நிமிடங்களுக்கு முன் மயங்கி விழுந்த மணமகன்: கொரோனா பாதிப்பு உறுதி என தகவல்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு திருமணம் நடந்து முதலிரவு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பத்திகொண்டா என்ற பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.

அதன் பின்னர் ஒரு பக்கம் அன்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இன்னொரு பக்கம் புதுமண தம்பதிகளுக்கு முதலிரவு ஏற்பாடுகளை அவருடைய உறவினர்கள் செய்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் திருமண வரவேற்பின் போது திடீரென மணமகன் மயங்கி விழுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு முதலில் கொரோனா பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது கொரோனா பாதிக்கப்பட்டதை உறுதி செய்தனர். இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் மணமகள் குடும்பத்தினர் உள்பட அந்த திருமணத்தில் பங்கேற்ற 70 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்க சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.