தமிழ் நடிகையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்
- IndiaGlitz, [Wednesday,May 06 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’உழைப்பாளி’ ’வீரா’ உள்பட தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் நடிகை ரோஜா. இயக்குனர் ஆர்கே செல்வமணியின் மனைவியான இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி என்ற தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார் என்பதும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாக இருக்கிறார் என்பதும் குறிப்பிட தக்கது.
இந்த நிலையில் நடிகை ரோஜா, தனது நகரி தொகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும் குறிப்பாக கொரோனா நேரத்தில் பசியுடன் இருக்கும் மக்களுக்கு உணவு வழங்குவது, பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் சென்று தானே கிருமிநாசினி தெளித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் ஒரு பக்கம் நடிகை ரோஜாவின் செயல்பாடுகளுக்கு ஆதரவு கிடைத்து வந்தாலும் ஒரே ஒரு சம்பவத்தின் மூலம் அவருக்கு கடுமையான கண்டனம் எழுந்தது.
சமீபத்தில் நடிகை ரோஜா தனது தொகுதியான நகரியில் குடிநீர் குழாய் ஒன்றை திறந்து வைக்க சென்ற போது இருபுறமும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் நின்று அவர் செல்லும் வழியெல்லாம் பூக்களை வாரி இறைத்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. கொரோனா நேரத்தில் இதுபோன்ற ஆடம்பர வரவேற்பு தேவையா? என்று கடுமையான கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் இதுகுறித்து கிஷோர் என்ற வழக்கறிஞர் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். ரோஜா பூக்கள் மீது நடந்து சென்ற வீடியோவையும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற போது வழக்கறிஞர் தாக்கல் செய்த வீடியோவை நீதிபதிகள் பார்த்து இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ரோஜாவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர். நடிகை ரோஜாவிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.