கொரோனா- ஆயுர்வேத மருந்துக்கு திடீர் ஒப்புதல் அளித்த ஆந்திர அரசு… என்ன காரணம்?
- IndiaGlitz, [Monday,May 31 2021]
ஆந்திரமாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் கொரோனாவிற்கு மூலிகை மருந்து தயாரித்து கொடுப்பதாகவும் அந்த மருந்தை சாப்பிட்ட தீவிர கொரோனா நோயாளிகள் கூட விரைவிலேயே குணம் அடைந்து விடுவதாகவும் கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் பரபரப்பு கிளம்பியது. அதோடு இந்த மருந்தைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் கிருஷ்ணபுரத்திற்கு படையெடுக்க தொடங்கினர்.
கிருஷ்ணபுரத்தில் போனிகி அனந்தய்யர் என்பவர் பல ஆண்டுகளாக மூலிகை வைத்தியம் செய்து வருகிறார். இவர் கொரோனாவிற்கு மூலிகை மருந்தைத் தயாரித்து அதை இலவசமாக பொதுமக்களுக்கு கண்ணில் செலுத்தி வந்தார். இந்த மருந்து கொரோனாவிற்கு எதிராக நல்ல பலனைக் கொடுப்பதாகப் பலரும் நம்பினர். இதனால் அனந்தய்யர் பார்க்க கடந்த சில வாரங்களாக பெரும் கூட்டம் கூடியது. இந்தக் கூட்டம் 5கிமீ அளவிற்கும் இருந்தது. இதையடுத்து கொரோனா பரவல் அபயாம் இருப்பதாக அனந்தய்யருக்கு போலீசார் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதையடுத்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அனந்தய்யரின் கொரோனா மருந்து குறித்து ஆய்வு செய்யுமாறு ஐசிஎம்ஆருக்கு பரிசீலனை செய்தார். அந்த அடிப்படையில் அனந்தய்யரின் கொரோனா மருந்து குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் இந்த மூலிகை மருந்து எந்தப் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என ஐசிஎம்ஆர் கூறியது. இதனால் அனந்தய்யர் தயாரித்த கண்ணில் செலுத்தும் மருந்துக்கு தடை விதித்து லேகியம் வடிவிலான ஆயுர்வேத மருந்துக்கு ஒப்புதல் அளித்து ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இதனால் அனந்தய்யர் முன்பே கூறியதுபோல கொரோனாவிற்கு எதிரான ஆயுர்வேத மருந்தை அதிகளவில் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆந்திர அரசாங்கமே ஒரு மூலிகை மருந்துக்கு ஒப்புதல் அளித்து இருப்பதும் இந்திய அளவில் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.