Andhaghaaram Review
'அந்தகாரம்': தமிழில் ஒரு அமானுஷ்ய த்ரில்லர் படம்!
பிரபல இயக்குனர் அட்லியின் மனைவி ப்ரியா அட்லியின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விக்னா ராஜனின் இயக்கத்தில் உருவாகி உள்ள ’அந்தகாரம்’ படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
இந்த படத்தில் மூன்று கதைகள் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்வது போலும், அந்த மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் இணைவது போல் தெரிவதும் ஆனால் உண்மையில் நடப்பது என்ன என்பது தான் படத்தின் சுருக்கமான கதையாக உள்ளது
லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட் பயிற்சியாளராக வரும் அவருக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது. அந்த தொலைபேசி அழைப்பில் பேசுவது யார்? அவரை கண்டுபிடிக்க அர்ஜுன் தாஸ் எடுக்கும் முயற்சிகள் என்ன? தனக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கும் நபரை கண்டுபிடித்த பின் நடப்பது என்ன? என்பது அவருடைய டிராக்கின் கதை
இன்னொரு கதையில் வினோத் கிஷான் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இருக்கிறார். டீச்சரை தவிர வேறு உறவுகள் யாரும் இல்லாத அவருக்கு திடீரென சிகிச்சைக்காக அதிக பணம் தேவைப்படுகிறது. அந்த பணத்திற்காக அவர் ஒரு ரிஸ்கான வேலையை செய்கிறார். அந்த வேலையால் ஏற்படும் விபரீதங்கள் என்ன? அதனால் அவருக்கு ஏற்பட்ட ஆபத்து என்ன என்பது தான் அவருடைய பகுதியின் கதை
அதேபோல் உளவியல் டாக்டர் குமார் நடராஜனுக்கு தான் சிகிச்சை அளிக்கும் நோயாளியால் ஒரு விபரீதம் ஏற்படும் போது அந்த விபரீதத்தால் பாதிக்கப்படும் அவர், குணமானபின்னர் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? அந்த நடவடிக்கையால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது அவருடைய பாகத்தின் கதை
இந்த மூன்று கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவாறு இருந்தாலும் ஒரு மையப்புள்ளியில் மூன்று கதைகளையும் இணைக்கும் வித்தையில் தான் இயக்குனர் விக்நடராஜன் வெற்றி பெற்றுள்ளார்.
’கைதி’ திரைப்படத்தில் மிக அற்புதமான நடிப்பை கொடுத்த அர்ஜூன் தாஸ், இந்த படத்தில் அபாரமாக நடித்து உள்ளார். ஒவ்வொரு முறை போன் அழைப்பு வரும் போதும் அதை எடுக்க அவர் பயப்படுவதும் தனது மனநிலையை அவரே சந்தேகப்படுவதும், தன்னை யாரும் குறிப்பாக தனக்கு நெருக்கமானவர் கூட நம்பாமல் இருப்பதால் ஏற்படும் விரக்தியையும் மிக மிக அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்
அதேபோல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடித்திருக்கும் வினோத் கிஷான் அச்சு அசலாக பார்வையற்றவர் போலவே நடித்திருக்கிறார். எந்த இடத்திலும் அவர் நடிப்பது தெரியவே இல்லை. உண்மையாகவே ஒரு மாற்றுத்திறனாளி இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படியே கேரக்டரில் வாழ்ந்துள்ளார்
அதேபோல் டாக்டர் கேரக்டரில் நடித்துள்ள குமார் நடராஜன் மற்றும் ஜீவா ரவியின் நடிப்பு ஓகே ரகம். பூஜா ராமச்சந்திரன் மற்றும் மிஷா கோஷல் ஆகிய இரண்டு நாயகிகள் தங்களுக்கு கொடுத்த கேரக்டரை மிக அருமையாக செய்து முடித்து வைக்கின்றனர்
இயக்குனர் விக்னா ராஜன் மூன்று விதமான கதைகளை எடுத்துக் கொண்டு மூன்றையும் ஒரே நேரத்தில் ட்ராவல் செய்யும்படியான கதை என பார்வையாளர்களை நம்பவைத்ததே அவரது மிகப்பெரிய வெற்றி. அந்த மூன்று கதைகளுக்கும் அவர் கூறிய பின்னணி மிகவும் அருமை. இதுபோன்ற ஜர்னரில் ஹாலிவுட்டிலேயே ஒரு சில படங்கள்தான் வந்திருக்கும் நிலையில் தமிழில் இப்படி ஒரு ஜர்னரை தைரியமாக அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்னவென்றால் அது இசை தான். மணிரத்னம் படத்தை விட வசனங்கள் மிகவும் குறைவாக இருக்கும் இந்த படத்தை தூக்கி நிறுத்துவது பின்னணி இசைதான். இடையிடையே வரும் இரண்டு மூன்று பாடல்களும் கேட்கும் வகையில் உள்ளது
மேலும் படத்தின் நிஜ ஹீரோ என்று கூற வேண்டுமானால் அது எடிட்டர் சத்யராஜ் நடராஜன்தான். மூன்றும் வெவ்வேறு காலங்களில் நடக்கும் இந்த கதையை மிக அருமையாக எடிட் செய்து அடுத்தடுத்த காட்சிகள் போலவே நிஜமாகவே நம்மை நம்ப வைத்துள்ளார். அதேபோல் ஒளிப்பதிவாளர் எட்வின் சாகேவின் பணி உலகத்தரம். மொத்தத்தில் டெக்னிக்கல் டீம் இந்த படத்தில் மிக அபாரமாக பணிபுரிந்துள்ளனர்
ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை தமிழ் ஆடியன்ஸுக்கு கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக துணிச்சலான இந்த படத்தை தயாரித்த பிரியா அட்லீக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தின் மைனஸ் என்று சொல்ல வேண்டுமென்றால் படத்தின் நீளம் தான். மூன்று மணி நேரம் என்பதுதான் கொஞ்சம் ஓவர்தான். ஆனால் இதே மூன்று மணி நேர படத்தை திரையரங்குகளில் பார்த்தால் நிச்சயமாக நல்ல அனுபவமாக இருக்கும். ஆனால் ஓடிடியில் பார்ப்பதால் இடையிலேயே டிவியை ஆஃப் செய்துவிட்டு போகும் அபாயமும் உண்டு
அதேபோல் இந்த படம் எத்தனை பேர்களுக்கு புரியும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அதிலும் முதல் அரை மணி நேர படத்தை ஒருவர் பொறுமையாக பார்த்துவிட்டால் அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஒரு படம் எவ்வளவு அருமையாக டெக்னிக்கல் மற்றும் திரைக்கதை ரீதியில் உருவாக்கப்பட்டு இருந்தாலும், அந்த படம் அனைத்து தரப்பு பார்வையாளனுக்கும் புரிய வேண்டும் என்ற மிக மிக முக்கியமான ஒரு விஷயத்தை இயக்குனர் தனது அடுத்த படத்தில் புரிந்து கொள்வார் என்று நம்புவோம்
வழக்கமான மசாலா படங்களை பார்த்து சலித்து போனவர்கள், ஒரு வித்தியாசமான அனுபவத்தை பெற விரும்புபவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்
- Read in English