பண்டைய தமிழர்கள் ஏன் மரங்களை வழிபட்டார்கள்? கோவில்களில் கொடி மரம் எப்படி வந்தது?
Send us your feedback to audioarticles@vaarta.com
பண்டை தமிழ் மக்கள் மரம், செடி, கொடி, சூரியன் என்று இயற்கை தெய்வங்களை வழிபட்டார்கள் எனப் பொதுவாகக் கேள்வி பட்டிருப்போம். அதெப்படி மரங்களை தெய்வமாக மதித்து இருப்பார்கள் என்ற சந்தேகம் வரும். உண்மையாகவே பண்டைய தமிழகத்தில் அந்த நடைமுறை இருந்ததா? என்றால் "ஆம்", பண்டைய தமிழ் மன்னர்கள் சில மரங்களைப் புனிதமானதாகவும் மதிப்பு மிக்கதாகவும் கருதியதற்குச் சான்றுகள் கிடைக்கின்றன.
வீரசோழியம் என்ற இலக்கண நூல் பண்டைய போர் முறைகளை 7 வகையாக பிரித்துக் காட்டி இருக்கிறது. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, தும்பை, வாகை இவை அனைத்தும் பூக்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. அதோடு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து நிலங்களும் (திணை) பூக்களைக் கொண்டே பிரிக்கப் பட்டுள்ளன. ஏன் இந்த அளவிற்கு பூக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டு இருக்கிறது? வேறு எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது? ஒரு வாழ்வியல் முறைக்கே பூக்களைக் கொண்டு பெயர் வைக்கப் பட்டு இருக்கிறது என்றால் அது கண்டிப்பாக முக்கியத்துவம் கொண்டதாகத் தான் இருக்க வேண்டும்.
1.சங்க இலக்கியக் காலத்தில் நன்னன் என்று ஒரு மன்னன் இருந்தான். அவன் தன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் மாம்பழத்தைத் திங்கக் கூடாது என்று கட்டளைவிட்டு இருந்தான். மீறி சாப்பிட்டால் அவர்களுக்கு மரணத் தண்டனை விதிக்கப் படும். அத்தண்டனையை மீறி கோசர் குலப் பெண் ஒருவர் சாப்பிட்டு மரண தண்டனை பெற்றதாக பாடலும் இருக்கிறது. (குறுந்தொகை 73 ஆவது பாடல்) எதற்காக நாட்டை ஆளும் ஒரு மன்னன் ஒரு மாம்பழத்தை சாப்பிட்டதற்காக மரண தண்டனை விதிக்க வேண்டும். அதற்காக “பெண் கொலை புரிந்த நன்னன்” என்று அவப் பெயரைச் சுமக்க வேண்டும்?
2. முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என்று பாரி வள்ளலைப் பற்றி கேள்வி பட்டு இருப்போம். அதென்ன ஒரு சாதாரண முல்லைக் கொடிக்கு (அதுவும் மலையில் எங்கு பார்த்தாலும் வளரக்கூடியது) ஒரு அரசன் தன் தேரினையே ஊன்று கோலாகக் கொடுப்பானா? இதுவும் விசித்திரமாகத் தோன்றவில்லை. சரி அத்தகைய இளகிய மனது உடைய மன்னன் வேறு யாருக்கும் அல்லது எந்தப் பொருளுக்கும் கொடை அளித்து இருக்க மாட்டானா? ஆனால் பாரி பற்றி கூறும் போது முல்லை கொடி மட்டும் தானே வருகிறது? இதற்கு என்ன காரணம்???
3. புறாவிற்கு தன் சதையையே அறுத்து கொடுத்தான் சிபி சக்கரவர்த்தி. என்ன இது விசித்திரமான கதை (புறம் 43). ஒரு மன்னன் புறாவுக்கு உணவு கொடுக்க வழியில்லாமலா இருந்தான்??? அவனது அரண்மனையில் ஒன்றுமில்லையா? அல்லது நாட்டில் கடுமையான வறுமையா? இந்தக் கதையிலும் ஏதோ ஒரு விசித்திரம் இருக்கிறது? புறா ஒன்று பருந்திற்கு அஞ்சி சிபி சக்கரவர்த்தியின் மடியில் வந்து அமர்கிறது. உடனே சிபி சக்கரவர்த்தி அந்த புறாவிற்கு தன் சதையை அறிந்து கொடுக்கிறான். புறாவுக்கு எதற்கு இத்தனை கரிசனம்???
4. மயிலுக்குப் போர்வை கொடுத்தான் பேகன் (புறம் 141). காட்டில் வாழும் ஒரு பறவை. குளிருக்கு அஞ்சி நடுங்குகிறதாம். அதென்ன அந்த மயில் இதுவரை குளிரையே பார்த்ததே இல்லையா என்ன? அப்படி பேகன் மயிலுக்கு தனது பொன்னால் ஆன ஆடையை அவிழ்த்துக் கொடுத்தால் மட்டும் அது அழகாகப் போர்த்திக் கொள்ளுமா என்ன? உண்மையில் எதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்?
5.காவல் மரம் – புறநானூற்று இலக்கியத்தில் போர் எப்படி ஆரம்பிக்கும் என்று பல குறிப்புகள் காணப்படுகின்றன. ஒரு மன்னனை வம்புக்கு இழுக்க வேண்டும் என்றால் சும்மா அவன் ஊருக்கு சென்று பொது இடத்தில் பாதுகாப்பாக வளர்க்கப் பட்டு இருக்கும் அவனது கொடி மரத்தை (அதாவது அந்த மன்னன் ஆசையாக வளர்க்கம் மரத்தை) வெட்டி விட்டால் போதும். மரத்தை முழுதாகக் கூட வெட்ட வேண்டாம். சும்மா ஒரு கிளையை முறித்து விட்டால் கூட போதும். போர் களை கட்டி விடும். தன் படை பரிவாரங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வெட்டினவனைத் தேடி கிளம்பி விடுவான். ஒரு மரத்தின் கிளையை முறித்ததற்காக ஏன் போர் எழ வேண்டும்? இது இன்னொரு முக்கியமான கேள்வி.
இந்தக் கதை நடக்கும் இடங்கள் எல்லாம் கொங்கு நாட்டுப் பகுதி என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. பண்டைய தமிழ் மன்னர்கள் வேந்து, அரசு என்று பெரிய பெரிய அரசுகளாக விளங்கிய காலத்தில் இந்த குறுநில மன்னர்கள் மட்டும்தான் மிகவும் சாதாரணமாக, மக்களுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்தி இருக்கிறார்கள். மேலும், அவர்கள் வாழ்வியல் முறையில் எந்த மதமும், சடங்குகளும் தலை காட்ட வில்லை என்பதும் குறிப்பிடப் பட வேண்டிய ஒன்று. அப்படி இருக்கையில் இவர்களின் வாழ்க்கையில் மரம், பறவை, கொடி எல்லாம் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. இதற்காக உயிரையும் கொடுக்க தயாராக இருந்திருக்கிறார்கள்.
ஏதோ போகிற போக்கில் அந்தக் காலத்துப் புலவர்கள், இந்த மன்னர்களை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள் என்று இந்த விஷயங்களை புறம் தள்ளிவிட முடியாது. ஏனென்றால் உன் பொருளை மட்டும் நம்பி நான் வாழ்க்கை நடத்த வில்லை; நீ இல்லை என்றால் என்ன? எனக்கு என் பாட்டு இருக்கிறது; இந்த உலகம் முழுக்க சொந்த காரர்கள் இருக்கிறார்கள் என்று வீம்பு பிடித்தவர்கள் நம் புலவர்கள். எந்த ஒரு காரணமும் இல்லாமல் பொய் சொல்வதற்கும் வாய்ப்பும் இல்லை.
சரி, எதற்காக இப்படி குறு நில மன்னர்கள் செடிக்கும் கொடிக்கும் புறாவுக்கும் விழுந்து விழுந்து சேவகம் செய்கிறார்கள்? ஏனென்றால் அவர்களின் குலக்குறியாக (Totem) குல அடையாளமாக செடியும், கொடியும் இருந்திருக்கின்றன. ஒரு மன்னன் தனது குலக் குறியைப் பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவனது கடமை. அதற்கு ஏதாவது தீங்கு வரும் என்றால் மன்னன் மிகவும் பதறி போயிருக்கிறான். பாரியும், சிபியும், பேகனும், நன்னனும் தங்களது குலக்குறிக்கு ஆபத்து வரும் போது தான் தங்களையும் அறியாமல் இப்படி பாதுகாப்பதற்கு முற்பட்டு இருக்கின்றனர்.
பண்டைய காலத்து மன்னர்கள் ஒவ்வொருவரும் தங்களின் அடையாளமாகவே (குலக்குறி) சில உயிரினங்களையும், செடி, கொடி மரங்களையும் கருதியிருக்கின்றனர். அதில் தன்னுடைய ஒட்டுமொத்த இனத்தின் உயிர்களும் அடங்கியிருப்பதாகவும் கருதி இருக்கின்றனர். அந்த அடையாளங்கள் தான் இனப்பெருக்கத்தை உற்பத்தி செய்வதாகவும் சில நேரங்களில் நம்பப் பட்டு இருக்கிறது. உலகம் முழுவதிலும் நாகரிகங்கள் வளருவதற்கு முன்னர் இப்படியான ஒரு குலக்குறியை தங்களுக்கென தனித்துவத்துடன் பண்பாட்டில் பின்பற்றப் பட்டு இருக்கிறது.
உதாரணமாக ஹாலிவுட் படமான அவதார் படத்தில் ஒரு மரம் ஒட்டு மொத்த இனத்தின் அடையாளமாகவும் புனிதமாகவும் கருதப்படுவது போன்ற காட்சி வரும். தங்களது இனத்திற்கு ஆபத்து வரும் நேரங்களில் அதனை தீர்த்து வைக்கும் சக்தி அந்த மரத்திற்கு இருப்பதாகவும் காட்சிப் படுத்தப் பட்டு இருக்கும். அதைப் போலத்தான் பண்டைய குலக்குறி அடையாளங்களும் மிகவும் மதிப்புடையதாகக் கருதப் பட்டு இருக்கிறது.
காவல் மரங்களும் அப்படித்தான். மன்னனின் உயிர் அதில் உறைந்து இருப்பதாகவே நினைத்து இருக்கின்றனர். மரம் பட்டு போகும் நேரங்களில் ஆட்சிக்கு ஆபத்து வரப்போகிறது எனக் கணித்து இருக்கின்றனர். காவல் மரத்தினை அழிப்பவர்களை மன்னர் எதிர்த்து போரிட்டு இருக்கிறான். உலகம் முழுக்கவே மன்னர்களின் காலத்தில் இத்தகைய காவல் மரங்கள் இருந்திருக்கின்றன. காவல் மரங்களை அழித்து விட்டால் அந்த ஆட்சிக்கு பெரும் பாதிப்பு வரப்போவதாக நினைத்திருக்கின்றனர். சில நேரங்களில் இது போன்ற காட்சியினை ஹாலிவுட் படங்களிலும் பார்க்க முடியும்.
சரி, பண்டைய கால மன்னர்களின் காவல் மரத்திற்கும் கோவில் கொடி மரத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்றால், இருக்கிறது என்பதே பதில்.
அரண்மனை – கோயில்
பண்டைய காலத்தில் மன்னர்கள் தங்கி இருக்கும் அரண்மனையை பெரும்பாலும் கோயில் என்றே அழைத்திருக்கின்றனர். எதற்கு மன்னன் அரண்மனை கோயிலாக மதிக்கப் பட்டது? இது வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாகும். சாதாரணமாக ஒரு ஆட்சியை எவராலும் எளிதாக உருவாக்கி விட முடியாது என்பதே உண்மை.
மன்னர் ஆட்சி தொடங்கப் பட்ட நாட்களில் உலகம் முழுக்க மன்னர்கள் பெரும் தெய்வங்களாகவே மக்கள் முன்னிலையில் காட்சிப் படுத்தப் பட்டனர். கிறிஸ்துவ நாடுகளை உதாரணமாக எடுத்துக் கொண்டு பார்த்தால் கோயிலில் உள்ள தெய்வத்தையும் மண்டியிட்டு வணங்குவார்கள். தங்களது மன்னர்களையும் மண்டியிட்டு வணங்குவார்கள். ஏறக்குறைய கடவுளும் மன்னனும் ஒரே அளவில் மதிக்கப் பட்டு இருக்கின்றனர். நமது கலாச்சாரத்தில் மண்டியிடும் பழக்கம் இல்லை என்றாலும் அரண்மனையும் கோவிலும் ஒன்றாகவே மதிக்கப் பட்டு இருக்கிறது. மன்னனும் ஒரு காலக் கட்டத்தில் கடவுளாக மதிக்கப் பட்டு இருக்கிறான். அன்றைக்கு பெரு மதங்கள் எதுவும் இல்லை என்பதும் முக்கியமானது. மன்னர் ஆட்சிக்குப் பின்னால் தான் மதங்கள் தங்களது நிறுவனங்களை பெரிதாகக் கட்டமைத்து அதன் பின்னணியில் மக்களை ஒன்றிணைக்கிறது.
அரண்மனைகளில் தொடங்கப் பட்ட காவல் மரங்களின் நீட்சி (தொடர்ச்சி) தான் கோவில்களிலும் கொடி மரங்களாக வைக்கப் பட்டு இருக்கின்றன. காவல் மரங்களை வளர்த்த ஒரு கலாச்சாரம் பின்னாட்களில் கோயில்களில் மரங்களை புனிதமாக நினைத்து வளர்த்து வருகிறது.
தற்போது ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு மரம் உகந்தவையாகக் கருதப்படுகிறது. வில்வம், வன்னி மரங்கள் பெரும்பாலும் கோவில்களுக்கு உகந்தவையாகவே கருதப்படுகிறது. மற்ற இடங்களிலும் இந்த மரங்களைப் பார்க்க முடிவதில்லை. ஆல மரம், வேம்பு, அரச மரம் போன்றவையும் புனிதத் தன்மை பொருந்தியதாகவே கருதப்படுகின்றன.
பண்டைய ராஜாக்கள் காலத்து கதைகளில் இப்படி வருகின்ற கதையைச் சில நேரங்களில் பார்க்க முடியும். ஒரு மன்னனின் உயிர் அவனுடைய வாளில் இருக்கிறது, அந்த வாளை அழித்தால் அவனை அளிக்க முடியும் என்று கதை சொல்லப் படும். நம்முடைய மன்னர்கள் தங்களது குல அடையாளமாக / குலக் குறியாக செடியையும் கொடியையும் பறவையையும் வைத்திருக்கிறார்கள். அந்தச் சமூகத்தின் எச்சச் சொச்சமாக நாம் இப்போது கோவில்களில் புனிதமாக கொடி மரத்தை முன்னால் நிறுத்தி இருக்கிறோம். வில்வம், வன்னி போன்ற மரங்களையும் நம்மை அறியாமல் மரபின் தொடர்ச்சியாக வளர்த்து வருகிறோம். ஒரு கலாச்சாரத்தின் நீட்சி அதன் சில பழக்கங்களில் தொடரும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout