இதைவிட நடிகைகளின் கைது செய்தி முக்கியமா? அன்புமணி ஆதங்கம்
- IndiaGlitz, [Wednesday,September 09 2020]
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து உயிரிழந்த மாணவரின் செய்தியை விட நடிகைகளின் கைது செய்தி முக்கியமா? என மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆதங்கத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும்!
மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தாத நீட் தேர்வால் நாம் இன்னும் எத்தனை மாணவச் செல்வங்களின் உயிர்களை பறி கொடுக்கப் போகிறோம். இந்த துயரங்களுக்கு முடிவு கட்ட நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்!
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட செய்திக்கு எந்த ஊடகமும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. நடிகைகளின் கைது செய்திகள் தான் விவாதப் பொருளாகின்றன. ஏழை மாணவர்களின் துயரம் மீது ஊடகங்கள் அக்கறை காட்ட வேண்டும்
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.