என் பேரன் கல்யாணத்திற்குள்ளாவது ரஜினி அரசியலுக்கு வருவாரா? பிரபல அரசியல் தலைவர் கிண்டல்
- IndiaGlitz, [Monday,June 12 2017]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1996ஆம் ஆண்டில் இருந்து கடந்த இருபது வருடங்களாக அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் 'போர் வரும்போது பார்த்து கொள்ளலாம்' என்று தான் அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவதை திரையுலகில் சேர்ந்த சிலரும், அரசியல் கட்சியை சேர்ந்த சிலரும் கிண்டலடித்து வருகின்றனர். வழக்கம்போல் ரஜினி தன்னுடைய படங்கள் வெளிவரும்போது செய்யும் ஸ்டண்ட்களில் இதுவும் ஒன்று என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஈராட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாமக இளைஞர் சங்க மாநில தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசியபோது, 'நடிகர் ரஜினிகாந்த் எனக்கு கல்யாணம் நடக்கும் போதே அரசியலுக்கு வரலாம். வருவார் என்றனர். பின்னர் என் மகள் கல்யாணம் நடந்த போது அவர் அரசியலுக்கு வரலாம். வருவார் என்றனர். போகிற போக்கை பார்த்தால் என் பேரன் கல்யாணம் நடக்கும் போதாவது அவர் அரசியலுக்கு வருவாரா? தெரியவில்லை' என்று கிண்டலுடன் பேசினார்.
சமீபத்தில் ரசிகர்களின் சந்திப்பின்போது ரஜினி பேசியபோது, 'அன்புமணி ராமதாஸ் நல்லா படிச்சவர், உலகம் முழுக்க சுற்றியவர், நல்ல திட்டங்கள் வைத்துள்ளார்கள்' என்று புகழ்ந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.