விட்டா என்னை அடிச்சிருவிங்க போல: செய்தியாளர்கள் சந்திப்பில் திணறிய அன்புமணி
- IndiaGlitz, [Monday,February 25 2019]
அதிமுக அரசை கடந்த மூன்று வருடங்களாக கடுமையாக விமர்சனம் செய்த கட்சிகளில் ஒன்று பாமக. தமிழக அமைச்சர்கள் செய்த ஊழல் குறித்து புத்தகமே வெளியிட்ட கட்சியான பாமக, திடீரென அதிமுகவுடன் கூட்டணி வைத்தது அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சி தான்
இந்த நிலையில் அதிமுகவுடனான கூட்டணி குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த தேர்தல்களில் தனியாக போட்டியிட்டோம். எங்களை அனைவரும் பாராட்டினார்கள்; ஆனால் யாரும் எங்களுக்கு ஓட்டு போடவில்லை. கடந்த நான்கு தேர்தல்களில் நாங்கள் தோல்வி அடைந்துள்ளோம். அதனால் இந்த தேர்தலில் வியூகத்தை மாற்றியுள்ளோம். இனிமேல் தமிழ்நாட்டின் எந்த கட்சியும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. அத்தகைய சூழல் இங்கு உருவாகியுள்ளது
திமுக உள்பட தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் எல்லாம் எங்களை அணுகியது. நாங்கள் திமுக கூட்டணியில் சேராததால்
ஸ்டாலின் இப்போது எங்களை விமர்சனம் செய்கிறார். ஆனால் நாங்கள் ஸ்டாலினை விமர்சனம் செய்ய மாட்டோம்
ஒரு கட்சியை விமர்சனம் செய்தால் அக்கட்சியுடன் கூட்டணி வைக்கக்கூடாதா? இந்தியாவில் எந்த கட்சியாவது விமர்சனம் செய்த கட்சியுடன் கூட்டணி வைக்காமல் இருந்துள்ளதா? காங்கிரசை திமுக விமர்சனம் செய்துள்ளது, திமுகவை மதிமுக விமர்சனம் செய்துள்ளது, இப்போது அதே கட்சிகள் கூட்டணியில் தானே இருக்கின்றது.
குட்கா ஊழல் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான புகார் மீதான விசாரணை முடியட்டும், ஆதாரங்கள் எல்லாம் வெளியே வரட்டும், என் நிலைப்பாட்டை அப்போது சொல்கிறேன். அதேபோல் ஆளுநரிடம் முதல்வருக்கு எதிராக குற்றச்சாட்டு வைத்தது உண்மைதான். இப்போதும் எங்கள் நிலைப்பாடு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே
மேலும் இன்றைய பேட்டியின்போது பதில் சொல்ல முடியாத கேள்விகளை கேட்ட நிருபர்களுக்கு தண்ணீர் கொடுக்க சொல்லிய அன்புமணி, விட்டா என்னை கேள்வியாலே அடித்துவிடுவீர்கள் போல என்று கூறினார். மேலும் ஒரு சில கேள்விகளுக்கு பதில் சொல்வதையும் அவர் தவிர்த்தார்.