பிகில் மட்டுமல்ல.. 2.0, தர்பார் படங்களுக்கும் தலா ரூ.100 கோடி பைனான்ஸ்.. யார் இந்த அன்புச்செழியன்?!
Send us your feedback to audioarticles@vaarta.com
சொத்து பத்திரங்கள் கொடுத்துவிட்டு, ஒரே ஒரு கையெழுத்து மட்டும் போட்டால் போதும், சில நொடிகளில் 50 கோடி ரூபாய் வரை கடன் தருவார் அன்புச்செழியன். தமிழ் சினிமா உலகையே ஆட்டிப்படைத்த பைனான்சியர் அன்புச்செழியன் முதன் முறையாக வருமான வரித்துறை பிடியில் சிக்கியுள்ளார். அன்புச்செழியனிடம் புதன்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
2015 -ம் ஆண்டு புலி திரைப்படம் வெளியான தருணத்தில் அன்புச்செழியன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிடச் சென்றபோது, அவர் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. அதை கருத்தில் கொண்ட வருமான வரித்துறை, இந்த முறை அவர் தப்பிவிடக்கூடாது என்பதால், மிக ரகசியமாகவே ரெய்டு திட்டத்தை தீட்டினர். அதன்படி புதன்கிழமை காலையில் முதல் நபராக அன்புச்செழியனை தங்களது விசாரணை வளையத்திற்குள் அதிகாரிகள் கொண்டுவந்தனர். தொடக்கத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த அன்புச்செழியன், பிறகு வருமான வரித்துறையிடம் விசாரணைக்கு ஒத்துழைத்தார் என்கிறார் விசாரணை அதிகாரி.
கணக்கில் மறைத்த 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், அடமான பத்திரங்கள், காசோலைகள் சிக்கிய பிறகு அன்புச்செழியன் சரண் அடைந்துவிட்டதாகவும் அதிகாரி கூறியுள்ளார்.அவரிடம் மூன்று நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில், பிகில் பட வசூல் மட்டுமின்றி, ஏராளமான திரைப்படங்களில் செய்துள்ள முதலீடு, வசூல் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளியிட்ட 2.0, தர்பார் ஆகிய திரைப்படங்களுக்கு அன்புச்செழியன் பைனான்ஸ் செய்துள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான இரண்டு படங்களுக்கு மட்டும் சுமார் 100 கோடி ரூபாயை லைக்கா நிறுவனத்திற்கு அன்புச்செழியன் கொடுத்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, ரொக்கப் பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி பைனான்சியர் அன்புச்செழியன் கோடிக்கணக்கில் ரொக்கம் வைத்திருந்தது எப்படி என்பதை வருமான வரித்துறையினர் விசாரித்துவருகின்றனர். அதேபோல், அன்புச்செழியனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், சொத்து ஆவணங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்றும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக சம்பாதித்த பணம் என்பது உறுதி செய்யப்பட்டால், இந்த விவகாரத்தை சிபிஐ அல்லது அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கவும் வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments