'அன்பிற்கினியாள்' தந்தை-மகளின் பாசப்போராட்டம்
மதுக்கூர் சேவியர் என்பவர் இயக்கிய மலையாள திரைப்படமான 'ஹெலன்' என்ற திரைப்படத்தின் ரீமேக் திரைப்படம் தான் இந்த 'அன்பிற்கினியாள்'. 16 ஆண்டுகள் கழித்து ரீ எண்ட்ரி ஆகியுள்ள அருண் பாண்டியனும் அவருடைய மகள் கீர்த்தி பாண்டியனும் நடித்துள்ள இந்தப் தந்தை மகள் பாச போராட்ட திரைப்படம் 'அன்பிற்கினியாள்' எப்படி இருக்கிறது என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்
எல்ஐசி ஏஜென்ட் ஆன தந்தை அருண் பாண்டியனுக்கு கீர்த்தி பாண்டியன் ஒரே மகள். வீடு கடனில் இருப்பதால் நர்சிங் மாணவியான கீர்த்தி பாண்டியன் கனடா சென்று தனது தந்தையின் கடன்களை அடைத்து அவரை நல்லபடியாக காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்கிறார். ஆனால் மகள் கனடா செல்வது அருண்பாண்டியனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் ஒருவரை காதலிக்கிறார். ஒருநாள் காதலனுடன் டூவீலரில் சென்றபோது போலீசார் அவர்களை மடக்கி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த விஷயம் கேள்விப்பட்டு காவல் நிலையத்திற்கு வரும் அருண்பாண்டியன் மகளை அழைத்துச் செல்கிறார்
இந்த சம்பவத்திற்கு பின் மகளிடம் அருண்பாண்டியன் பேசாமல் இருக்கும் நிலையில் திடீரென கீர்த்தி பாண்டியன் காணாமல் போகிறார். இதனால் பதறிப்போகும் அருண்பாண்டியன், மகள் எங்கே சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியாமல் தத்தளிப்பதும், அதன்பின்னர் காதலன் மற்றும் போலீஸ் உதவியை தேடுவதும், இறுதியில் மகளை கண்டுபிடித்தாரா? என்பதும்தான் இந்த படத்தின் கதை.
நீண்ட இடைவெளிக்குப்பின் அருண்பாண்டியனின் அருமையான நடிப்பை காணமுடிகிறது. முதல் பாதியில் தன் மகளிடம் பாசத்தை கொட்டும் அருண்பாண்டியன் ஆகட்டும், மகளுக்கு தனக்கே தெரியாமல் ஒரு காதலர் இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்வதில் ஆகட்டும், இரண்டாம் பாதியில் மகளைக் காணாமல் தவித்து எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆகட்டும், ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக நடித்துள்ளார்
கீர்த்தி பாண்டியன் மகள் கேரக்டருக்கு அப்படியே பொருத்தமாகியுள்ளார். உண்மையான தந்தையுடன் நடிப்பதால் எந்தவிதமான செயற்கை தனமும் இல்லை. தந்தை மகள் கெமிஸ்ட்ரி மிக அருமையாக உள்ளது. கீர்த்தி பாண்டியன் காதலனாக நடித்திருக்கும் ப்ரீவின் உள்பட இந்த படத்தில் உள்ள மற்ற கேரக்டர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்
இயக்குனர் கோகுல் ஒரு திரைப்படத்தை எப்படி ரீமேக் செய்ய வேண்டும் என்பதை மிகச்சரியாக செய்துள்ளார். ஒரிஜினல் படத்தின் கதையில் பாதிப்பு இன்றி அதே நேரத்தில் தமிழ் ஆடியன்ஸ்களுக்கு பொருத்தமாக திரைக்கதையை மாற்றி மிகச்சரியாக ரீமேக் செய்துள்ளார். அவருக்கு பாராட்டுகள். குறிப்பாக கீர்த்தி பாண்டியன் காணாமல் போனவுடன் திரைக்கதையில் ஜெட் வேகம்.
இசை அமைப்பாளர் ஜாவித் ரியாஸ்ஸின் சிறப்பான பின்னணி இசை படத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றது. மகேஷ் முத்துச்சாமியின் ஒளிப்பதிவு மற்றும் ஜெயச்சந்திரனின் படத்தொகுப்பு கச்சிதம். கோகுல் மற்றும் ஜான் மகேந்திரன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள ஒவ்வொரு வசனங்களும் மனதில் பதியும் என்பது குறிப்பிடத்தக்கது
மொத்தத்தில் ஒரு விறுவிறுப்பான டீசன்ட்டான ரீமேக் திரைப்படம் 'அன்பிற்கினியாள்' என்பதால் இந்த படத்தை யாரும் மிஸ் செய்துவிட வேண்டாம்.
Comments