த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என்ற வெற்றிப்படத்துடன் அறிமுகமான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அனுபவம் வாய்ந்த நடிகரும் அதிக ரசிகர்களைக் கொண்ட மாஸ் நட்சத்திரமுமான சிலம்பரசனை வைத்து இயக்கியிருக்கும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியாகியிருக்கும் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.
மதுரை மைக்கேல் (சிலம்பரசன்) மதுரையில் ஒரு தாதாவின் அடியாள். செல்வி (ஸ்ரேயா சரண்) என்ற பெண்ணைக் காதலிக்கிறான். அவளும் அவன் காதலை ஏற்றாலும் இந்த கொலைகாரத் தொழிலை விட்டுவிட்டு துபாய்க்குப் போய் வேலை தேடிக்கொள்ளலாம் என்று அவனை வற்புறுத்துகிறாள். அவனும் காதலியின் கோரிக்கையை ஏற்று அவளுடன் செல்ல முடிவெடுக்கிறான். ஆனால் அதற்கு முன் தனக்கு வாழ்க்கை கொடுத்தவருக்காக ஒரு கொலை செய்கையில் காவல்துறையிடன் அகப்பட்டு சிறை செல்கிறான்.
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்வின் தாத்தா என்ற முதியவராக சென்னையில் வாழ்கிறார்ன் மைக்கேல் (இடையில் நடக்கும் விஷயங்களை சொன்னால் படத்தின் முழுக் கதையை சொல்ல வேண்டிவரும் என்பதால் அவற்றைத் தவிர்க்கிறோம்).
சென்னையில் தன் நண்பர்களுடன் வசதியாக வாழும் அஸ்வின் தாத்தா, ரம்யா (தமன்னா) என்ற இளம் பென்ணைக் காதலிக்கிறார். அஸ்வின் தாத்தாவின் துணிச்சல் மற்றும் வீரத்தால் ஈர்க்கப்படும் ரம்யா அவருடன் இணக்கமாகப் பழகுகிறாள். ஆனால் காதலிக்கிறாளா என்பதை நீங்கள் படத்தில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் முதல் படமான ‘த்ரிஷா இல்லன்னா நயன் தாரா’ சென்ஸாரில் ஏ சான்றிதழ் பெற்றதோடு சில சர்ச்சைகளைக் கிளப்பினாலும் அந்தப் படம் பொழுதுபோக்கு அம்சத்தில் குறைவைக்கவில்லை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். ஆனால் தனது இரண்டாவது படத்தில் சிம்பு போன்ற ஒரு திறமையான நடிகருடன் கைகோர்த்திருக்கும் ஆதிக், கதை-திரைக்கதை விஷயத்தில் பெரிதும் கோட்டைவிட்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சிம்புவின் மாஸ் இமேஜுக்கேற்ற காட்சிகளிலும் வசனங்களிலும் செலுத்திய கவனத்தை கொஞ்சம் கதை-திரைக்கதையிலும் செலுத்தியிருந்தால் படம் சிறப்பாக இருந்திருக்கும்.
கதையில் புதியதாக எதுவும் இல்லை. கதபாத்திரங்களுடன் ஒன்ற முடியவில்லை. அவர்களின் செய்கைகளுக்கு வலுவான காரணங்கள் சொல்லப்படவில்லை. முதல் பாதியில் பெரிதாக எதுவும் இல்லை என்றாலும் ஓரளவும் ஒன்றிப் பார்க்க முடிகிறது. இரண்டாம் பாதியில் திரைக்கதை அந்தரத்தில் ஊசலாடுகிறது. படத்தில் பல கேள்விகளுக்கு விடை சொல்லாமல் இரண்டாம் பாகத்துக்கு தயார்படுத்தும் வகையில் முடித்திருக்கிறார்கள்.
நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்ட விஷயங்களும் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. முதல் பாதியில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு கரண்ட் ஷாக் அடித்துக்கொண்டே இருப்பதை வைத்து செய்திருக்கும் காமடிக்கு கொஞ்சம்கூட சிரிப்பு வரவில்லை. இரண்டாம் பாதியில் கோவை சரளா, ராஜேந்திரன், சாமிநாதன், மனோகர் ஆகியோர் செய்யும் விஷயங்களில் சிரிக்க வைப்பதற்கு பதில் எரிச்சலூட்டுகின்றனர். ’அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ‘தள்ளிப் போகாதே’ பாடலை ஸ்பூஃப் செய்திருக்கும் காட்சி மட்டுமே கொஞ்சம் சிரிக்க வைக்கிறது.
சிம்புவின் திரை மற்றும் நிஜ ஆளுமைக்குப் பொருத்தமான மாஸ் காட்சிகளை இயக்குனர் வடிவமைத்துள்ளார். அவையெல்லாம் ரசிகர்களின் ஆரவாரத்தைப் பெருகின்றன. குறிப்பாக அவரது அறிமுகக் காட்சி, சண்டைக் காட்சிகள், இடைவெளிக் காட்சி, மற்றும் இரண்டாம் பாதியின் சில காட்சிகள் அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் பொதுவான சினிமா ரசிகர்களையும் ஈர்க்கின்றன, இதுபோன்ற காட்சிகளை அதிகமாக வைத்திருந்தால்கூட படம் தப்பித்திருக்கும்.
வசனங்கள் சில இடங்களில் வலுவாகவும் கவனிக்கவைப்பவையாகவும் இருக்கின்றன. ஆனால் மோசமான இரட்டை அர்த்த வசனங்களும் பெண்களைப் பொதுமைப்படுத்தி இழிவுபடுத்தும் வசனங்களும் அதிகம். பெண்களை கண்ணியமாகக் காண்பிக்கும் பழக்கம் தமிழ் சினிமாவில் அதிகரித்துவரும் வேளையில் இதுபோன்ற வசனங்கள் ஆட்சேபத்துக்குரியவை.
மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா என இருவேறு பாத்திரங்களில் சிலம்பரசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது உடல்மொழியாலும் வசன உச்சரிப்பாலும் பல காட்சிகள் மேம்படுகின்றன. சில நீண்ட வசனங்கள் பேசும் இடங்களிலும் எமோஷனல் காட்சிகளிலும் தன் நடிப்புத் திறமையையும் நிரூபிக்கிறார் சிம்பு. ஆனால் அஸ்வின் தாத்தாவாக அவருக்கான மேக் அப் மிகவும் செய்ற்கையாக உள்ளது. அதேபோல் இந்த பாத்திரத்துக்கு அவர் ஏன் உடல் எடையை ஏற்றினார் என்பதும் புதிராக உள்ளது.
ஸ்ரேயா ஹோம்லி தோற்றத்தில் அம்சமாக இருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். மாடர்ன் உடைகளில் கிளாமரை அள்ளித் தருகிறார் தமன்னா. நடிப்பதற்குப் பெரிய வேலையில்லை.
முன்னாள் கதாநாயகி கஸ்தூரி ஒரு எதிர்பாராத பாத்திரத்தில் நன்கு நடித்திருக்கிறார். சிம்புவின் நண்பராக வரும் மஹத் பாத்திரத்துக்குப் பொருத்தம் மற்றொரு நண்பராக வரும் விடிவி கணேஷை ஒரே மாதிரியான பாத்திரங்களில் பார்த்து போரடிக்கிறது. ஒய்.ஜி.மகேந்திரா போன்ற ஒரு மூத்த நடிகரை கோமாளித்தனம் செய்து இரட்டை அர்த்தம் வசனம் பேசும் பாத்திரத்தில் நடிக்கவைத்திருப்பது வேதனை.
யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் நன்றாக உள்ளன. பின்னணி இசை சிறப்பாக உள்ளது. சில சாதாரண காட்சிகளும் இசையால் தரம் உயர்த்தப்படுகின்றன. கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்குப் பொருத்தமான ஒளியமைப்பைக் கொண்டு கண்களை உறுத்தாத வண்ணம் அமைந்துள்ளது. சண்டைக் காட்சிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இது ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் முதல் பாகம்தான். இரண்டாம் பாகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்றார்போல் முதல் பாகத்தில் கதையின் சில முடிச்சுகளை அவிழ்க்காமல் விட்டிருக்கின்றனர். இரண்டாம் பாகத்தில் அந்த முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டும் மேலும் சில சுவாரஸ்யமான விஷயங்கள் சேர்க்கப்பட்டால் இரண்டாம் பாகமாவது சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது.
முதல் பாகத்தை மட்டும் வைத்து சொல்வதென்றால், சிம்புவின் நடிப்பு மற்றும் திரை ஆளுமை, யுவனின் இசை மற்றும் தமன்னாவின் கிளாமர் ஆகியவற்றுக்காக மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
Comments