விஜயகாந்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்ய வேண்டாம்: நடிகர் ஆனந்த்ராஜ்

உடல்நலமின்றி இருக்கும் விஜயகாந்தை வைத்து அவரது குடும்பத்தினர் அரசியல் வியாபாரம் செய்ய வேண்டாம் என நடிகர் ஆனந்த்ராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விஜயகாந்துடன் பல படங்களில் நடித்தவர் நடிகர் ஆனந்த்ராஜ். அவர் பேட்டி ஒன்றில், 'விஜய்காந்த் எனது அண்ணன் போன்றவர். அவரது உடல்நிலை குறித்து கேள்விப்பட்டேன். அவரை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றாலும் அவரது உடல்நிலையை அவ்வபோது அறிந்து வருகிறேன்.

விஜயகாந்த் தனது குடும்பத்திற்காக அதிகம் உழைத்துவிட்டார். எனவே அவருக்கு அவரது குடும்பத்தினர் முழு ஓய்வு தர வேண்டும் என்பது எனது வேண்டுகோள். அவர் ஆரம்பித்த கட்சியை உடல்நலமில்லாமல் இருக்கும் அவரது பெயரை பயன்படுத்தி வியாபாரம் செய்ய வேண்டாம். அவரது மனைவி நல்ல பேச்சாற்றல் கொண்டவராக இருக்கின்றார். அவர் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று கொண்டு முழுநேர அரசியல் செய்யலாம்' என்று ஆனந்த்ராஜ் தெரிவித்தார்.

மேலும் விஜயகாந்த் குறித்தும் அவரது கட்சி குறித்தும் 'அம்மா' என்னிடம் தனிப்பட்ட முறையில் சில விஷயங்களை தெரிவித்துள்ளார். அதனை தக்க சமயத்தில் தெரிவிப்பேன்' என்று கூறினார்.

மேலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் இதுவரை அவரவர் மாவட்டத்தை விட்டு வெளியே வராதவர்கள். முதல்முறையாக மாநிலம் முழுவதும் களமிறங்கியுள்ளனர். அவர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.