ஆனந்த யாழை மீட்டிய அற்புத கவிஞர் நா.முத்துகுமார்
- IndiaGlitz, [Monday,August 14 2017]
தமிழ் திரையுலகில் ஆனந்த யாழை மீட்டிக்கொண்டிருந்த ஒரு கவிஞர் திடீரென தனது பயணத்தை முடித்து கொண்டது திரையுலகிற்கு மட்டுமின்றி ஒவ்வொரு ரசிகனுக்கும் மிகப்பெரிய இழப்பு. கவிஞர் கண்ணதாசனின் வாரீசாக, சுலபமான சொற்களால் மிகப்பெரிய தத்துவங்களை பாமரனுக்கும் புரிய வைத்தவர் நா.முத்துகுமார்.
இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு
கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு
என்ற இரண்டே வரிகளில் திருக்குறள் போல வாழ்க்கையின் தத்துவங்களை மிக எளிதான் மக்களிடம் கொண்டு சென்ற கவிஞர். பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், வாலி ஆகியோர்கள் நம்மை விட்டு பிரிந்த பின்னரும் ஒவ்வொரு வருடமும் அவர்களின் பிறந்த நாளிலும், மறைந்த நாளிலும் நாம் நினைவில் கொள்கிறோம் என்றால் மற்ற நாட்களில் அவர்கள் எழுதி விட்டு சென்ற பாடல்கள் நம்மை தினம் தினம் நனைய வைப்பதுதான் காரணம். அந்த வகையில் நா. முத்துகுமாரின் ஒவ்வொரு பாடலும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
நா. முத்துகுமார், திரைப்படத்தின் கேரக்டருக்கு பாட்டு எழுதுகிறாரா? அல்லது நமக்கு பாட்டு எழுதினாரா? என்று யோசிக்கும் அளவிற்கு ஒவ்வொரு பாட்டை கேட்கும்போதிலும் நம்முடைய சொந்த அனுபவங்கள் நினைவில் எட்டி பார்க்கும். அதுதான் அவரது வெற்றி 7G ரெயின்போ காலனி படத்தில் இடம்பெற்ற 'கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை' பாடலில் வரும்.
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
என்பதை ஒவ்வொரு காதலனும் உணர்ந்திருக்கும் வரிகள் ஆகும்.
அதேபோல் 'பில்லா 2' படத்தில் இடம்பெற்ற 'உனக்குள்ளே ஒரு மிருகம்' என்ற பாடலில் வரும் வரிகளான
ஏரிக்காமல் தேன் அடை கிடைக்காது
உதைகாமல் பந்து அது எழும்பாது
வலி அதுதான் உயிர் பிழைக்கும்
இது வரை இயற்கையின் விதி இதுதான்
என்ற வரிகள் அனைவரையும் சிந்திக்க வைக்கும் வரிகள் ஆகும். இதே பாடலில் இடம்பெற்ற
இங்கு நண்பன் யாரும் இல்லையே
எதிர்க்கும் பகைவன் யாரும் இல்லையே
என்றும் நீதான் உனக்கு நண்பனே
என்றும் நீதான் உனக்கு பகைவனே
என்ற வரிகள் எவ்வளவு உண்மை என்பது வாழ்ந்து அனுபவப்பட்டவர்களுக்கு மட்டுமே புரியும்
நா.முத்துகுமாரின் பாடல்கள் எந்த அளவுக்கு தத்துவங்களை பொழிந்ததோ அதே அளவுக்கு காதல் ரசம் சொட்டும் பாடல்களும் இருக்கும். 'கஜினி' திரைப்படத்தில் அவர் எழுதிய சுட்டும் விழி சுடரே பாடலில்,
மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்
தூக்கத்தில் உளரல் கொண்டேன்
தூரலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவு கொண்டேன்
கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா?
உன் கண்ணில் நான் கண்டேன்
ஆகிய வரிகள் இதைவிட ஒரு பெண்ணை வர்ணிக்க வார்த்தைகள் உண்டா? என்ற அளவுக்கு அதிசயிக்க வைக்கும் பாடல். அதே போல் 'யாரடி நீ மோகினி' படத்தில் இடம்பெற்ற 'வெண்மேகம் பெண்ணாக உருவானதோ' என்ற பாடலில்
மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னை கண்டவரை கண் கலங்க நிற்கவைக்கும் தீ
பெண்ணே என்னடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகையில் பெண் இனமே கோவப்பட்டதென்னடி
போன்ற வரிகள் அவரது கவிப்புலமைக்கு சான்றாக அமைந்தது.
அதேபோல் காதல் தோல்வி பாடல்களும் நா.முத்துக்குமாருக்கு அத்துப்பிடி. பொதுவாக காதல் தோல்வி என்றால் ஆண்கள் பாடும் பாடலாகத்தான் இருக்கும். ஆனால் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் ஒரு பெண் தனது காதல் தோல்வியை நினைத்து வருந்தும் பாடலான 'முதன்முதல் பார்த்த ஞாபகம்' பாடலில் வரும்.
நீந்தி வரும் நிலாவினிலே, ஓராயிரம் ஞாபகங்கள்
நீண்ட நெடும் கனாவினிலே, நூறாயிரம் தீயலைகள்
நெஞ்சமெனும் வினாக்களுக்கு என் பதிலென பல வரிகள்
சேருமிடம் விலாசத்திலே உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள் இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள் அங்கு போனது உன் தடமில்லையே
வரிகளை காதல் தோல்வியின் வலியை உணர்த்தும் வரிகள் என்று கூறலாம்.
இவ்வாறு நா.முத்துகுமாரின் வரிகளின் பெருமையை சொல்லிக்கொண்டே போனால் எத்தனை டெராபைட் இருந்தாலும் போதாது. அவரது கவிதைக்கடலில் இருந்து தேர்ந்தெடுத்த ஒருசில முத்துக்கள்தான் இவை. நம் வாழ்வின் ஒவ்வொரு பொழுதிலும், ஒவ்வொரு செயலிலும் அவரது வரிகள் ஞாபகம் வரும் அளவுக்க்கு ஆயிரக்கணக்கான பாடல்களை கொடுத்துள்ளார். ஆனால் கண்ணதாசன், வாலியை விட பெரிய சாதனை செய்திருக்க வேண்டிய அவருடைய பாடல்கள் திடீரென தனது பயணத்தை முடித்து கொண்டது தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு. அவர் மீண்டும் ஒரு ஜென்மம் எடுத்து தனது பயணத்தை தொடர வேண்டும் என்பதே அனைவரின் நப்பாசை. தமிழ் உள்ளவரை அவரது கவிதைகள் உயிர்வாழும்.