கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றிய ஆனந்த் மஹேந்திரா… மகிழ்ச்சியில் ஏழை குடும்பம்!

  • IndiaGlitz, [Saturday,January 29 2022]

வீட்டில் கிடைத்த பழைய உலோகங்கள், இரும்பு மற்றும் துணிப்பொருட்களை வைத்து கார் தயாரித்த மகாராஷ்டிராவை சேர்ந்த நபருக்கு ஆனந்த் மஹேந்திரா புது பொலிரோ காரை பரிசாகக் கொடுத்து அசத்தியிருக்கிறார். இதனால் அந்தக் குடும்பம் மகிழச்சியில் தத்தளித்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த தத்தாத்ராயே லோசர் என்பவர் தனது குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தனது வீட்டில் கிடைத்த பழைய உலோகங்கள், கையில் கிடைத்தப் பொருட்களை எல்லாம் வைத்து கார் ஒன்றை உருவாக்கி அசத்தினார். கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி வெளியான இந்தக் கார் பற்றிய தகவல் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து பழைய பொருட்களை வைத்து கார் உருவாக்கிய ஏழை குடும்பத்திற்கு புதிய பொலிரோ காரை பரிசாக வழங்குகிறேன் என்று ஆனந்த் மஹேந்திரா வாக்குறுதி அளித்திருந்தார்.

மேலும் அவர் உருவாக்கிய கார் சாலையில் ஓட்டுவதற்கான விதிமுறைகளை கொண்டிருக்கவில்லை. அதனால் மஹேந்திரா நிறுவனத்தின் காட்சிக்காக அந்தக் காரை கொடுத்துவிடும்படி கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து ரூ.60 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட தனது காரை தத்தாத்ராயே லோசர் கடந்த 24 ஆம் தேதி மஹேந்திரா நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டு புதிய பொலிரோ பெற்றுக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் பலரது மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து விளையாட்டு வீரர்கள், வித்தியாசமான மோட்டர் வாகனங்களை உற்பத்தி செய்பவர்களுக்கு ஆனந்த் மஹேந்திரா தனது நிறுவனக் காரை பரிசாக அளித்து வருகிறார். இந்தச் சம்பவம் புதிய முயற்சிக்கு தோள் கொடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது என சமூகநல ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.