நட்சத்திர வேட்பாளர் தொகுதி: மதுரையில் வெல்வது யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தென் தமிழகத்தில் மதுரை பாராளுமன்ற தொகுதி மிகவும் முக்கியமான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியில் தான் பி.கக்கன் கே.டி.கே தங்கமணி, பி.ராமமூர்த்தி, சுப்பிரமணியசாமி, பி.மோகன், மு.க அழகிரி என்று பெருந்தலைகள் போட்டியிட்டு வென்றனர். தமிழகத்திலேயே இந்த தொகுதி தான் 2009ஆம் ஆண்டு கழகங்கள் கைப்பற்றாத தொகுதியாக இருந்தது. கக்கன் முதல் மோகன் வரை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் மட்டுமே மாறி மாறி வென்ற இந்த தொகுதியில் 1998ஆம் ஆண்டு அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட சுப்பிரமணிய சாமி வெற்றி பெற்றார். முதல்முறையாக இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக மு.க.அழகிரி கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலிலும், 2014ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளராக கோபாலகிருஷ்ணனும் வென்றுள்ளனர்.
மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மேலூர், ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய மதுரை பாராளுமன்ற தொகுதியில் இம்முறை திமுக கூட்டணி கட்சியான மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு.வெங்கடேசன் களமிறங்கியுள்ளார். சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் வெங்கடேசன், மதுரை தொகுதி முழுவதும் நல்ல அறிமுகமுள்ளவர் என்பதும், பதவி இல்லாதபோதே மக்களுடன் மக்களாக பல போராட்டங்களில் கலந்து கொண்டவர் என்பதும் அவருக்கு பிளஸ் ஆக உள்ளது.
மேலும் நேரடி அரசியல் களம் மற்றும் எழுத்து களம் ஆகியவற்றில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்துக்கான மக்கள் பணியையும் சிறப்பாக ஆற்றுவார் என்றே மதுரை மக்கள் நம்பத்தொடங்கி விட்டனர். ஒரு எழுத்தாளர், இலக்கியவாதி பாராளுமன்றத்துக்கு சென்றால் மதுரைக்கும் மதுரை மக்களுக்கும் பெருமைதானே!
வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் இவர் அளித்த முதல் பேட்டியில் மதுரையில் இருந்து சென்னை செல்லும் ‘தேஜஸ்’ ரயில் என்று பெயர் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக ‘தமிழ்ச்சங்க ரயில்’ என்று வைக்க தனது முதல் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என்று கூறியது மதுரை மக்களை பெரிதாகவே கவர்ந்தது.
அதே நேரத்தில் மதுரை இன்னும் மு.க.அழகிரி கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுவதால் திமுக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக அவர் வேலை செய்தால் வெற்றியை சு.வெங்கடேசன் நூலிழையில் இழந்துவிடவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க-வின் ஐ.டி விங்கை நிர்வாகம் செய்த வரும் ராஜ் சத்யன், அமைச்சர் செல்லூர் ராஜுவின் பரிந்துரையால் சீட் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் ஆர்.கே.உதயகுமார், மீண்டும் கோபாலகிருஷ்ணனுக்கு சீட் வாங்கித்தர பெரும் முயற்சி செய்தும் அது தோல்வியில் முடிந்துள்ளதால் இந்த தொகுதியில் அதிமுகவின் உள்கட்சி பூசல் தேர்தல் சமயத்தில் இருக்கும் என கருதப்படுகிறது.
முன்னாள் மேயரின் வாரிசாக இருந்தாலும், ராஜ் சத்யன் மதுரை மக்களுக்கு அதிக பரிட்சயம் இல்லாதவர் என்பது ஒரு மைனஸ். ஆனால் எழுத்தாளர் சு.வெங்கடேசனிடம் இல்லாத ஒரு மிகப்பெரிய பிளஸ் இவரிடம் உள்ளது. அதுதான் வைட்டமின் ப. கடைசி நேரத்தில் பணத்தை தண்ணீராக செலவு செய்ய அதிமுக தயங்காது என்பதால் இதனை மீறி சு.வெங்கடேசன் வெற்றி பெற என்ன வியூகம் அமைக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜாதி ஓட்டுக்கள் என்ற ரீதியில் பார்த்தால் ராஜ்சத்யன் முக்குலத்து பிரிவை சேர்ந்தவர். அதேபோல் சு.வெங்கடேசன் நாயுடு பிரிவையும் அவரது மனைவி செளராஷ்டிரா பிரிவையும் சேர்ந்தவர். இந்த மூன்று சமூகத்தவர்களும் மதுரையில் மெஜாரிட்டியாக இருப்பதால் தூத்துகுடி போன்று ஜாதி ஓட்டுக்கள் இந்த தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும் என்று சொல்ல முடியாது.
மேலும் இந்த தொகுதியில் கமல்ஹாசன் கட்சி மற்றும் டிடிவி தினகரன் கட்சி நிறுத்தும் வேட்பாளர்கள் கம்யூனிஸ்ட் மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை மாற்றும் சக்தியாக இருப்பார்களா? என்பதை அந்த கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பின்னரே முடிவு செய்ய முடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout