பட பூஜையில் வளைகாப்பு வைபவம்: ஒரு புதுமையான சினிமா விழா
- IndiaGlitz, [Monday,August 06 2018]
திரைப்பட பூஜை விழா ஒன்றில் வளைகாப்பு வைபவம் நடத்தி புதுமையான பூஜை விழாவாக 'நான் செய்த குறும்பு' படக்குழுவினர் நடத்தியுள்ளனர்.
ரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மகாவிஷ்ணு இயக்கத்தில் கயல்சந்திரன் நடிக்கும் படம் 'நான் செய்த குறும்பு '. இப்படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் போடப்பட்டது. தொடர்ந்து பிரசாத் லேப் ப்ரிவியூ தியேட்டரில் படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இது வழக்கமான விழாவாக இல்லாமல் ஒரு வித்தியாச விழாவாக அமைந்து இருந்தது.
விழா மேடையில் ஐந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அப்பெண்மணிகள் ஐவரையும் மேடையில் அமர வைத்தனர். மங்கல இசை ஒலித்தது . வேத மந்திரம் முழங்கியது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மாலையிட்டு மஞ்சள் பூசி , சந்தனம் பூசி , குங்குமம் இட்டு ,புது வளையல்கள் அணிவித்து அட்சதை தூவி, இனிப்புகள் ஊட்டினர். அவர்களுக்குப் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு படக் குழுவின் சார்பில் பெருமைப்படுத்தப்பட்டனர் . இயக்குநர் மற்றும் படக்குழுவினர் வளைகாப்பு நடத்தப்பட்ட பெண்மணிகள் காலில் விழுந்து வணங்கினார்கள் . அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த விழாவில் 'நான் செய்த குறும்பு' பட இயக்குநர் மகாவிஷ்ணு பேசும் போது, 'நான் ஸ்டாண்ட் அப் காமெடியன். அசத்தப்போவது யாரு என்று நிகழ்ச்சியில் 9 ஆண்டுகள் இருந்தேன். சினிமா வந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் சினிமாவில் 1500 தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களில் 900 பேரிடமாவது பேசியிருப்பேன். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் பலரும் படம் எடுக்க வருவதில்லை . காரணம் தப்பான கதை , தப்பான படக்குழு, தப்பான மேனேஜர் என்று அமைந்ததால் தான். ஒரு நல்ல மேனேஜர் கொண்ட படக்குழு அமைந்து விட்டால் சினிமாவில் இழப்புக்கு இடமே இல்லை .எனக்கு அப்படி அமைந்துள்ளது. 'நான் செய்த குறும்பு '. ஒரு ரொமாண்டிக் காமெடி சஸ்பென்ஸ் த்ரில்லர் குடும்பப் படம் என்று கூறலாம். இது பட்ஜெட் படம் தான், ஆனால் அதில் நம்ப முடியாத அளவுக்கு ரிச் குவாலிட்டி இருக்கும்.தரம் இருக்கும்'என்று கூறினார்
இந்த விழாவில் இந்த படத்தின் நாயகி அஞ்சுகுரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.