லாக்டவுன்: இந்தியாவில் மாட்டிக்கொண்ட அயல்நாட்டுப் பெண்ணின் சுவாரசியம் மிக்க அனுபவம்!!!
- IndiaGlitz, [Tuesday,August 11 2020]
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருக்கிறார் தெரசா சொரியானோ மஸ்க்கோஸ் என்ற பெண்மணி. இவர் ஒரு கட்டிடக்கலை வடிவமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் கட்டிக்கலை மற்றும் கலாச்சாரப் பின்னணியைத் தெரிந்து கொள்வதற்காக இவர் இந்தியா வந்ததாகவும் கூறியுள்ளார். தனது தோழியுடன் வந்த இவர் தோழியை மும்பையில் விட்டுவிட்டு கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம் குண்டப்பூர் என்ற கிராமத்தில் உள்ள தனது அண்ணனின் தோழர் ஒருவரை பார்ப்பதற்காக சென்றிருக்கிறார். அந்நேரத்தில் கொரோனா பரவல் தடுப்புக்காக மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கில் அவர் அங்கேயே தங்கவேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது.
இதற்காக துளியும் வருத்தப்படாத தெரசா குண்டப்பூர் கிராமத்தில் மேற்கொள்ளும் இயற்கை விவசாயத்தை அந்த விவசாயிகளுடன் ஒன்றாக இணைந்து கற்றுக் கொண்டிருக்கிறார். இந்திய விவசாயம் மட்டுமல்லாது, உணவு வகைகள், நெசவு முறைகள் என அனைத்தையும் அந்த மக்களோடு இணைந்து குதூகலமாகக் கற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறார். ஏன் 4 மாதங்களுக்குப்பிறகு ஓரளவிற்கு கன்னடத்தையும் இவர் கற்றுக் கொண்டாராம். சிக்கன் சுக்கா, இட்லி சாம்பார், மீன்கறி இப்போது தெரசாவிற்கு விருப்பமான உணவாகவும் மாறிப்போயிருக்கிறது.
இந்திய முறையிலான இயற்கை விவசாயத்தை முற்று முழுதாகக் கற்றுத்தேர்ந்த இவருக்கு பால்கறக்கவும், நெல் நடவும், வேர்கடலை அறுவடை செய்யவும் அங்குள்ள மக்கள் கற்றுக் கொடுத்தாகவும் செய்திகள் கூறுகின்றன. இதுகுறித்து கருத்துக் கூறியுள்ள தெரசா நான் லாக்டவுனில் மாட்டிக் கொண்டதைக் குறித்து கொஞ்சமும் வருத்தப்படவில்லை. இயற்கை விவசாயம், கலாச்சாரம், உணவுமுறைகள் அனைத்தையும் என்னால் எளிதாகக் கற்றுக் கொள்ள முடிந்தது. இந்தியாவின் நகரப் பகுதிகளைவிட கிராமம் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்களாக இருக்கிறார்கள் எனத் தெரிவித்து இருக்கிறார்.
கடந்த வாரம் கோவா சென்ற தெரசா அங்கிருந்து ஸ்பெயினுக்கு பறந்து சென்றதாகக் கூறப்படுகிறது. கொரோனா மக்களிடையே கடுமையான பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தாலும் இதுபோன்ற நல்ல விஷயங்களையும் செய்திருக்கிறது.