தமிழக மாணவர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்- பள்ளிக் கல்வித்துறை!
- IndiaGlitz, [Thursday,May 27 2021]
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சார்பாக ஒரு முக்கிய வேண்டுகோள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் மறு அறிவிப்பு வரும்வரை மாணவர்கள் யாரும் பள்ளி வளாகத்தில் கூடி விளையாடவோ அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ளவோ கூடாது எனவும் இதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த 24 ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. அதோடு கொரோனா பரவல் சங்கிலியை தமிழகத்தில் முழுமையாக உடைக்க வேண்டும் என அரசாங்கம் பேராடி வருகிறது. இதன் முக்கிய அங்கமாக கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வீட்டில் இருக்கும் பள்ளி மாணவர்கள் சிலர் பள்ளி வளாகத்தில் ஒன்றுகூடி காலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வதாகவும் மாலை நேரத்தில் விளையாடுவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை கேள்விக் குறியாகி இருக்கிறது. எனவே கொரோனா நேரத்தில் மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பள்ளி வளாகங்களுக்குள் சென்று விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் தமிழகப் பள்ளி திறப்பு குறித்து மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி வளாகத்தை மூடி வைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கும் வலியுறுத்தப் பட்டு இருக்கிறது.