விராட் கோலியை கவுரவித்த இந்திய நிறுவனம்… அட்டகாசமான புகைப்படம் வெளியீடு!

இந்தியாவில் பிரபல பால் உற்பத்தி நிறுவனமாக விளங்கிவரும் அமுல் நிறுவனம் விராட் கோலியின் கேப்டன்ஷியை கவுரவிக்கும் விதமாக புகைப்படம் வெளியிட்டு உள்ளது. இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

3 வித கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி கடந்த செப்டம்பர் 2021இல் டி20 போட்டி கேப்டன்சியில் இருந்து விலகினார். தொடர்ந்து கடந்த டிசம்பரில் ஒருநாள் போட்டி கேப்டன்சியில் இருந்து விலக்கப்பட்டார். அதையடுத்து கடந்த 17 ஆம் தேதி டெஸ்ட் கேப்டன்சி பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த கேப்டன்சியை வெளிப்படுத்தி வந்த கோலிக்கு அமுல் நிறுவனம் சிறப்பு டூடுல் வெளியிட்டு கவுரவித்து இருக்கிறது. அதில் குட்டிக் குழந்தையான அமுல் உட்கார்ந்திருக்க விராட் கோலி அந்த குழந்தையின் தொப்பியை நிதானமாக சரிசெய்துவிடுகிறார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.

இந்திய அணிக்காக 68 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன்சி பதவிவகித்த கோலி இதுவரை 40 வெற்றிகளையும் 11 டிராக்களையும் 17 தோல்விகளையும் பெற்றுள்ளார். அதேபோல சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றியைப் பெற்ற 4 ஆவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 5864 ரன்களை குவித்த விராட் கோலி தனது டெஸ்ட் கேப்டன்சிகளில் 7 இரட்டைச் சதம், 20 அரை சதம், 18 அரை சதம், 7 ஆட்ட நாயகன் விருதையும் தட்டிப்பறித்துள்ளார்.

மேலும் சொந்த மண்ணில் டெஸ்ட் கேப்டன்சியாக இருந்த 11 தொடரிலும் அவர் வெற்றியே பெற்றிருக்கிறார். அதேபோல இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை என வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியையும் அவர் இந்திய அணிக்காகப் பெற்றுத் தந்திருக்கிறார்.

இவை எல்லாவற்றையும்விட கோலியின் வருகைக்கு முன்பு 7 ஆவது இடத்தில் இருந்த இந்திய அணியின் தரவரிசையை தற்போது 1 ஆம் இடத்திற்கு முன்னேற்றி இருக்கிறார். இத்தனை சாதனை படைத்த டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி பதவி விலகியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியையே கொடுத்திருக்கிறது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பதவி வகித்த கோலிக்கு அமுல் நிறுவனம் நன்றி தெரிவித்து சிறப்பு டூடுல் வெளியிட்டு இருக்கிறது.