ரஜினியை சந்திக்க சென்னை வரும் அமித்ஷா: மீண்டும் அரசியலா?

  • IndiaGlitz, [Monday,January 04 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி தமிழகத்தில் ஆன்மீக அரசியலை அறிமுகம் செய்வார் என்று அவரது ரசிகர்கள் காத்திருந்த நிலையில், திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வரவில்லை என்றும் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்றும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார். அவரது முடிவு ரஜினி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தாலும் அவரது உடல்நிலையை கணக்கில் கொண்டு ரஜினியின் முடிவை ஏற்றுக் கொண்டனர்

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வரும் 14ஆம் தேதி சென்னை வர திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த வருகையின் போது அவர் ரஜினியின் வீட்டிற்கு சென்று அவரது உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே அமித்ஷாவின் சந்திப்பிற்கு பின்னர் ரஜினி தனது அரசியல் முடிவை மாற்றுவாரா? அல்லது பாஜக கூட்டணிக்கு வாய்ஸ் மட்டும் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

மேலும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அதிமுக கூட்டணியை உறுதி செய்வதோடு தொகுதி பங்கீடு குறித்து சென்னை வருகையின்போது அமித்ஷா ஆலோசனை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சென்னை வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது