முன்னாள் பிரதமருடன் படித்தவர் அமிதாப்பச்சன்: ரஜினிகாந்த் சொன்ன தகவல்..!
- IndiaGlitz, [Saturday,September 21 2024]
வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டின் போது, நடிகர் அமிதாப் பச்சன் முன்னாள் பிரதமருடன் படித்தவர் என்ற ரஜினிகாந்த் கூறிய தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரஜினிகாந்த் மேலும் கூறியதாவது:
வேட்டையன்’ படத்தில் சத்யதேவ் என்ற கேரக்டர் இருப்பதாகவும், அந்த கேரக்டரில் அமிதாப்பச்சன் நடிக்கப்போவதாக இயக்குனர் ஞானவேல் சொன்னபோது நான் ஆச்சரியப்பட்டேன். உண்மையில் சிவாஜி அவர்கள் உயிருடன் இருந்திருந்தால், அவர் தான் அந்த கேரக்டரில் நடித்திருப்பார். இருப்பினும், அமிதாப் பச்சன் அந்த கேரக்டரில் மிகவும் சூப்பராக நடித்தார்.
அமிதாப் பச்சனின் தந்தை ஒரு மிகப்பெரிய எழுத்தாளர்; அவர் நினைத்திருந்தால் வேறு எந்தத் துறையையும் தேர்வு செய்திருக்கலாம், ஆனால் அவருக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் சினிமாவை தேர்வு செய்தார்.
அமிதாப் பச்சன் பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரியாது. அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். அமிதாப் பச்சன் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இருவரும் ஒன்றாக படித்தவர்கள். ஒரு முறை அமிதாப் பச்சன் பயங்கர விபத்தில் சிக்கினார். அப்போது வெளிநாட்டில் இருந்த பிரதமர் இந்திரா காந்தி உடனடியாக இந்தியாவிற்கு திரும்பி வந்தார். அப்போது தான், அமிதாப் பச்சன் மற்றும் ராஜீவ் காந்தி ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது.
அமிதாப் பச்சன் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார். ஒட்டுமொத்த மும்பையே அவரை பார்த்து சிரித்தது. 'நல்ல இடத்துக்கு போனவர் எப்போது விழுவார்' என்று காத்திருந்தனர். ஆனால், அமிதாப் பச்சன் பின்னர் மீண்டு வந்து, டிவி ஷோ மற்றும் விளம்பரங்களில் நடித்ததன் மூலம் தனது விற்பனை செய்யப்பட்ட வீட்டை மறுபடியும் வாங்கினார். 'வாழ்க்கை மேலே, கீழே நகரும். ஒரே இரவில் நல்ல நேரம் இருந்தால் மேலே செல்லலாம்; அதே இரவில் கீழே விழக்கூடும்,' என்று ரஜினிகாந்த் பேசினார்.