ஓடிடியில் வெளியாகிறது அமிதாப்பச்சனின் அடுத்த படம்: திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த தகவல் இன்னும் யாருக்கும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா ஆகியோர்கள் நடித்த நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டன என்பது தெரிந்ததே. ஓடிடியில் ரிலீஸ் செய்வதற்கு எதிராக உரிமையாளர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அமிதாப்பச்சன் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான ’Gulabo Sitabo’ என்ற திரைப்படமும் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

அமிதாபச்சன் நடித்த ’Gulabo Sitabo’என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருவதால் இந்த திரைப்படம் இப்போதைக்கு திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

இதனையடுத்து தற்போது இந்த படம் அமேசானில் ரிலீஸ் செய்யப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜூன் 12-இல் அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் இந்த படத்தின் டிரெய்லர் மிக விரைவில் வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சின்ன பட்ஜெட் படம் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை ஒடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆகிக்கொண்டிருப்பது திரையரங்கு உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.