வரலாறு காணாத அளவிற்கு கடன்வாங்கும் அமெரிக்கா!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அந்நாட்டை நிலைக்குலைய செய்திருக்கிறது. அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.8% அளவிற்கு சரிந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 2008 ஆம் ஆண்டின் பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் அமெரிக்க கடும் பொருளாதாரச் சரிவை சந்தித்து இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக அமெரிக்காவின் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் 26 மில்லியன் மக்கள் வேலையின்மை காரணமாக நிவாரணத் தொகை கேட்டு அரசிடம் விண்ணப்பித்து இருக்கின்றனர். அமெரிக்கா இதுவரை 3 ட்ரில்லியன் டாலர்களை கொரோனா நிவாரண நிதியாக அறிவித்து இருக்கிறது.
கொரோனா நிவாரண நிதியை அதிகளவில் வழங்கும் உலக நாடுகளில் அமெரிக்காவே முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. அமெரிக்கா இந்தத் தொகையை ஈடுகட்ட தற்போது கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு அந்நாட்டில் நிலவிய கடும் பொருளாதார மந்தநிலையில் வாங்கிய கடனை விட தற்போது 5 மடங்கு அதிகமாக கடன் வாங்க இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, கொரோனா நெருக்கடி நிலைமையைச் சமாளிக்க அந்நாடு 3 ட்ரில்லியன் டாலர்களை அதாவது 3 லட்சம் கோடி டாலர்களை கடனாக வாங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
அமெரிக்காவில் தற்போது வரை 4.4% பேர் வேலை வாய்ப்பை இழந்திருக்கின்றனர். அடுத்த காலாண்டில் வேலைவாய்ப்பு இழந்தோர் மற்றும் உள்நாட்டு உற்பத்தியும் இன்னும் குறைந்து காணப்படும் என பொருளாதார நிபுணர்கள் அறிவித்து இருக்கின்றனர். மேலும், அமெரிக்காவில் “கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை 1 லட்சமாக அதிகரிக்கும்” என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்து இருந்தார். இதுவரை அந்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்க இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments