சில மாநிலங்கள் கொண்டு வந்துள்ள தொழிலாளர் நலச்சட்டத் திருத்தம்!!! தொழிலாளர்களே எதிர்ப்பது ஏன்???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா ஊரடங்கினால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு போக முடியாமல் கடும் அவதிப்பட்டனர். போக்குவரத்து அனைத்தும் முடக்கப் பட்டதால் பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்தே சென்ற கோரச் சம்பவங்களும் நாடு முழுவதும் நடந்தேறியது. அதைத் தொடர்ந்து மாநில அரசுகள் தங்களது தொழிலாளர்களை மீட்டு வருவதற்கு போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்தன. சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இந்நிலையில் அவர்களது பயணச் செலவை யார் ஏற்றுக் கொள்வது என்ற விவாதங்கள் எல்லாம் நடந்தது.
இப்படி தொழிலாளர்கள் நெருக்கடியை சந்தித்து வரும் வேளையில் பல மாநிலங்கள் தொழிலாளர்கள் நலச் சட்டங்களில் சில திருத்தங்களை செய்திருக்கிறது. இந்தத் திருத்தங்கள், தனது சொந்த ஊரை விட்டு புலம் பெயர்ந்து வருடக் கணக்கில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் நலனை காப்பாற்றும் விதத்தில் அமையும் என எதிர்ப் பார்த்தவர்களுக்கு பேரிடியாக அமைந்ததாகச் சில தொழிலாளர்கள் கூறுகின்றனர். உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா இந்த 4 மாநிலங்களின் தொழிலாளர் நலச் சட்டங்களில் தான் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதுவும் உத்திரப்பிரதேச மாநில அரசு கொத்தடிமை ஒழிப்பு, கட்டுமானத் தொழிலாளர்கள் நலச் சட்டங்கள், ஊதியம் வழங்கல், பணியாளர் இழப்பீடு இந்த 4 அம்சங்களைத் தவிர்த்த ஒட்டு மொத்த தொழிலாளர்கள நலச் சட்டங்களையும் அடுத்த 3 வருடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இந்த அறிவிப்பினால் பணி நேரம் 12 மணி நேரம் வரை நீடிப்பு செய்யப்படும் என்ற அச்சத்தைத் தொழிலாளர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். மஹாராஷ்டிராவிலும் இதே நிலைமைதான். கடைசியில் அலகாபாத் நீதிமன்றம் தலையிட்டு 12 மணி நேர வேலை நீடிப்புக்கு தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதோடு ஒரு கடையை பதிவு செய்ய முன்பிருந்த சட்டத்தின்படி 30 நாள்கள் காத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரே நாளில் கடையை பதிவு செய்து கொள்ளலாம். அதோடு 1000 நாட்கள் வரையிலும் பதிவு செய்யும் தொழிற் சாலைகளுக்கு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளில் விலக்கு அளிக்கப் படும். சீனா போன்ற நாடுகளை விட்டு வெளியேறும் தொழிற்சாலைகளை ஈர்க்கும் விதத்தில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டாலும் தொழிலாளர்களின் வேலை நேரம் நீடிப்பு என்பது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலைமையை உண்டாக்கி இருக்கிறது. கொரோனா முடிந்து உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று தொழில்சாலைகள் ஆர்வம் தெரிவிக்கலாம்.
ஆனால் புதிய தொழிலாளர் சட்டத் திருத்தத்தின் படி அவர்களின் வேலை நேரம் 8 – லிருந்து 12 ஆக அதிகரிக்கும். ஆனால் சம்பளம் அதே அளவில்தான் கொடுக்கப்படும். சம்பளம் அதிகரிக்காது. இதுதான் தற்போது மனித உரிமை மீறலாக இருக்கிறது என்று குரலை உயர்த்த காரணம். அதாவது ஒரு தொழிலாளி 8 மணி நேர வேலைக்கு 80 ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் அடுத்து அவராக முன்வந்து ஓவர் டைம் பணி செய்யும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரட்டிப்பு கூலியை தற்போது அமலில் இருக்கும் தொழிலாளர் சட்டத்தின் படி வழங்க வேண்டும். 80–1 மணிநேரத்திற்கு =10 ரூபாய் என்றால் ஓவர் டைம் செய்யும் போது 1 மணிநேரத்திற்கு 20 ரூபாய் கூலி கிடைக்கும். 12 மணிநேரம் வேலை செய்தால் கூலியாக 80 ரூபாயும் ஓவர் டைமுக்கு 80 ரூபாயும் என 160 ரூபாய் கூலிக் கிடைக்கும். இந்த வருவாயை மிக நேர்த்தியாக புதிய தொழிலாளர் நலச் சட்டம் குறைந்திருக்கிறது. ஒரு தொழிலாளி கண்டிப்பாக 12 மணிநேரம் வேலை பார்க்க வேண்டும் என்பதோடு அவருக்கு 120 ரூபாய் கூலிக் கொடுத்தால் மட்டும் போதுமானது என்ற சட்டத் திருத்தத்தை பல மாநில அரசுகள் ஏற்படுத்தி இருக்கின்றன.
ஏற்கனவே பாதுகாப்பு உத்திரவாதங்கள் இன்றி, இழப்பீடுகள் இன்றி வேலைப் பார்த்து வரும் தொழிலாளர்களின் அடிப்படையை உரிமையை இது பறிப்பதாக இருக்கிறது என பலர் விமர்சனங்களை வைக்கத் தொடங்கி இருக்கின்றனர். புதிய தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்களில் பெண்கள் மற்றும் குழந்தை நலச் சட்டங்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதேபோல புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இது பொருந்தாது எனவும் கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும் இந்தியாவில் உள்ள 10 விழுக்காட்டு தொழிலாளர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அடிப்படையிலான உத்திரவாதம் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 90 விழுக்காட்டு தொழிலாளர்கள் அமைப்புச் சாரா தொழிலாளர்களாகவே பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எந்த உத்திரவாதத்தையும் பெற முடியாமல் உழைப்பை இரைத்து வருகின்றனர்.
2008 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலச்சட்டத்தை எந்த மாநில அரசுகளும் நிறைவேற்ற முன்வராத நிலையில், தற்போது தொழிற்துறைகளை ஈர்க்கும் விதத்தில் பல சட்டத் திருத்தங்களை திருத்தி வருகிறது. இதுபோன்ற நடவடிக்கையால் புதிய தொழிற் தொடங்கும் நிறுவனங்கள் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தயங்க மாட்டார்கள். உற்பத்தி துரித வேகத்தில் பெருகும். அதனால் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என மாநில தரப்புகளில் இருந்து விளக்கம் கொடுக்கப் படுகிறது. புதிய அறிக்கையின் படி குறைந்த சம்பளம் 15 ஆயிரத்தைக் குறைத்து யாருக்கும் சம்பளம் வழங்கக் கூடாது என விதிமுறை இருக்கிறது. இதற்கு தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்குவார்களா என்பதும் உறுதியாக தெரியாது. இந்த வேலைகளையும் அமைப்புச்சாராத் தொழிலாளர்களை வைத்து அல்லது தொகுப்பூதிய பணியாளர்களை வைத்து செய்து கொண்டால் என்ன? என்ற மனநிலைக்கும் முதலாளிகள் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.
இதுபோன்ற எந்த விசாரணையும் இல்லாமல் மாநில அரசுகள் தொழிலாளர் நலச் சட்டத்தில் திருத்தம் செய்திருக்கிறது என விமர்சனக் குரல் எழுந்ததால் உத்திரப்பிரதேச மாநில அரசு கொண்டுவந்த தொழிலாளர் சட்டத் திருத்தத்தைத் தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பும் படி முதலமைச்சர் யோகி ஆதித்யா உத்தரவிட்டு இருக்கிறார். அதைத்தொடர்ந்து மற்ற மாநில அரசுகளும் மத்திய அரசின் ஒப்புதலை பெறுவதற்கான நடைமுறைகளில் இறங்கியிருக்கின்றன. தொழிலாளர் நலச் சட்டம் என்பது அவர்களின் பாதுகாப்பு, இழப்பீடு, உரிமை, பணிநிறைவு, பிஎஃப் உறுதித்தொகை போன்றவற்றை உறுதி செய்வதற்காக நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு பல கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து ஏற்படுத்தப் பட்ட சட்ட விதிகள் ஆகும். அந்தச் சட்டத் திருத்தத்தை கொரோனா நேரத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து விடுவதால் தொழிலாளர்களின் நலன் பாதிக்கப்படும் என்பதையும் எதிர்காலத்தில் தொழிலாளர்கள் நலச் சட்டத்தின் வீரியம் குறைந்து விடும் எனவும் தொழிலாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments