விஜய் நினைத்து இருந்தால் வேற மாதிரி ஆகியிருக்கும்: நெய்வேலி பாஜக போராட்டம் குறித்து அமீர்
- IndiaGlitz, [Monday,February 10 2020]
நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் தற்போது இதுகுறித்து இயக்குனர் அமீர் கூறியதாவது:
விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு செய்தது ஆதாரத்தின் அடிப்படையிலா? அல்லது அரசியல் அச்சுறுத்தல் அடிப்படையிலா? என்பதே சந்தேகமாக உள்ளது. 'மாஸ்டர்' படப்பிடிப்பின் போது அவசர அவசரமாக விஜய்யை அழைத்து வந்து வருமானவரித் துறையினர் விசாரணை செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கான கால அவகாசம் கொடுத்து சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை செய்திருக்கலாம். இதற்கு முந்தைய வருமானவரி சோதனைகளில் இருந்து பார்க்கும்போது விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது ஒரு அரசியல் பின்னணி இருப்பதாகத்தான் சந்தேகம் கொள்ள வைக்கிறது.
அதேபோல் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் போராட்டம் நடத்தியது என்பது கொச்சையானது. இதேபோல் 10 பேர் கொடியைத் தூக்கிக் கொண்டு எல்லா இடத்திலும் போராட்டம் செய்தால் எந்த வேலையும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஷயத்தில் ரொம்ப மெச்சூரிட்டியாக நடந்து கொண்டார் என்றுதான் நான் நினைக்கின்றேன். அவர் நினைத்திருந்தால் தனது ரசிகர்களை பாதுகாப்புக்கு நிறுத்தி இருக்கலாம். அவ்வாறு நிறுத்தி இருந்தால் அங்கே மிகப் பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கும். ஆனால் அதனை விஜய் தவிர்த்து மெச்சூரிட்டியாக நடந்து கொண்டது பாராட்டுக்குரிய விஷயம் ஆகும் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.