தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டதா? காரசாரமாக விமர்சிக்கும் நேர்காணல் வீடியோ!
- IndiaGlitz, [Thursday,May 06 2021]
தெலுங்கானாவின் ஆளுநராக பதவி வகித்து வரும் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் முன்னதாகத் தமிழக பாஜக தலைவராக இருந்தபோதே “தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்“ என சவால் விடுத்து வேலைப் பார்த்து வந்தார். ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் பாஜக தான் நினைத்ததை தமிழகத்தில் செய்துகாட்ட முடியாமல் தவித்து வந்தது. தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது.
இதனால் கடந்த 2001 க்கு பிறகு பாஜக தமிழகத்தில் 4 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் கோவை தெற்கு தொகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் அவர்கள் தன்னை எதிர்த்து நின்ற நடிகர் கமல்ஹாசனை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். அதேபோல மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி, திருநெல்வேலி தொகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சராக இருந்த நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி ஆகியோர் பாஜக சார்பில் வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றுள்னர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்தில் பாஜக கால் ஊன்றிவிட்டதா என்ற உற்சாகத்தைப் பலரும் எழுப்பி வருகின்றனர். காரணம் கடந்த 2001 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 4 தொகுதியில் வெற்றிப் பெற்றது. அடுத்து 2006, 2011, 2016 என எந்த சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றிப் பெறவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மட்டும் கன்னியாகுமரி தொகுதியில் நின்று பொன் ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெற்றார்.
தற்போது 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாஜக 4 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. இதையடுத்து பாஜகவின் கனவு தமிழகத்தில் ஜெயித்து விட்டதா என்ற ஆர்வத்தையும் சிலர் எழுப்பி வருகின்றனர். இந்தக் கேள்விகளுக்கு நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல்வேறு பரிமாணங்களை கொண்ட அமீர் சுல்தான் அவர்கள் பதில் அளித்து பிரத்யேக நேர்காணல் வழங்கியுள்ளார். இந்த நேர்காணல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.