ரஜினிகாந்த் முதலில் டெல்லியில் இருந்துதான் தொடங்க வேண்டும்: அமீர்

  • IndiaGlitz, [Thursday,January 25 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவிரைவில் அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் களத்தில் குதிக்கவுள்ள நிலையில் அவரது ஆன்மீக அரசியல் குறித்து திரையுலகினர்களும் அரசியல்வாதிகளும் கடந்த சில நாட்களாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று நடந்த அமீர் தயாரிப்பில் உருவான 'அச்சமில்லை அச்சமில்லை' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் அமீர், 'ரஜினிகாந்த் கூறிய சிஸ்டம் கெட்டு போய்விட்டது என்பது தமிழகத்தில் அல்ல, டெல்லியில் தான். எனவே அவர் முதலில் பாராளுமன்றத்தேர்தலில் டெல்லி அரசுடன் தான் மோத வேண்டும் என்று கூறினார்

எம்ஜிஆருக்கு பின் தமிழகத்தில் பல ஆண்டுகளாக சினிமாக்காரர்கள் கையில் தான் ஆட்சி இருந்தது. அது இன்னும் தொடருமா? என்று கூறிய அமீர்,  பக்கத்து மாநிலமான ஆந்திராவிலும் ஒருகாலத்தில் என்.டி.ஆர் ஆட்சி செய்தார். ஆனால் அங்கு சினிமாக்காரர்கள் கடந்த சில வருடங்களாக ஆட்சியில் இல்லை. தமிழகம் மட்டும்தான் இன்னும் சினிமாக்காரர்களை அரசியலில் வைத்துள்ளது.

ஆனால் ஒரு விதத்தில் பார்த்தால் 'கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொல்பவர்கள் ஆட்சி செய்வதற்கு பதில் கமல், ரஜினி ஆட்சி செய்தாலே நல்லது என்றும் தோன்றுகிறது

ரஜினியிடம் நான் வைக்கும் ஒரு வேண்டுகோள், மாநில அரசை பிடிப்பதால் எந்த அதிகாரமும் இல்லாத அரசைத்தான் அவர் ஆட்சி செய்ய முடியும். எனவே டெல்லியில் ஆட்சியை பிடித்தால்தான் சிஸ்டத்தை சரிசெய்ய முடியும்' என்று இயக்குனர் அமீர் தெரிவித்தார்.