விஜய்யின் அணுகுமுறையை ரஜினியிடம் எதிர்பார்த்தேன் : அமீர்

  • IndiaGlitz, [Wednesday,November 23 2016]

பிரதமர் நரேந்திரமோடி கருப்புப்பணம் மற்றும் கள்ளநோட்டை ஒழிப்பதற்காக சமீபத்தில் எடுத்த அதிரடி நடவடிக்கையான ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு நாட்டில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகி 15 நாட்கள் ஆகிவிட்டபோதிலும் இன்னும் வங்கியின் வாசல்களில் பணத்தை மாற்ற கூட்டம் அதிகமாகத்தான் உள்ளது.
இந்நிலையில் பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு முழு ஆதரவு கொடுத்த ரஜினிகாந்த் அவர்களின் கருத்து குறித்தும், இதில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டிய விஜய்யின் கருத்து குறித்தும் இயக்குனர் அமீர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
'இந்த விஷயத்தில் ரஜினியின் கருத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவித்த இடமும், தெரிவித்த முறையும் வேண்டுமானால் தவறாக இருந்திருக்கலாம். ஆனால் நான் சொன்ன கருத்து தவறானவை அல்ல. என்னுடைய கருத்தை ஒரு சாமானியனின் கோபமாகத்தான் பார்க்க வேண்டும். மோடி அறிவிப்புக்கு ஏற்பட்டுள்ள எவ்வித பாதிப்பையும் அறியாமல் ரஜினிகாந்த் சொன்ன வாழ்த்து அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் சமீபத்தில் விஜய் இதுகுறித்து கூறிய கருத்தை நான் வரவேற்கின்றேன். கருப்புப்பணம் ஒழிக்கும் நடவடிக்கையை ஆதரித்ததோடு இதனால் ஏற்பட்டுள்ள சாமான்ய மக்களின் துயர்துடைக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற ஒரு கருத்தைத்தான் நான் ரஜினி அவர்களிடம் இருந்து எதிர்பார்த்தேன்.
கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் அதை ஒழிக்க வேண்டிய நடைமுறையை பின்பற்றுவதில் அரசு கவனத்துடன் இருக்க வேண்டும். என்று அமீர் பேட்டி அளித்துள்ளார்.