ஆம்புலன்ஸ் டிரைவர் கேட்ட அதிக தொகை: இறந்த மகனின் உடலை தோளில் சுமந்து பைக்கில் சென்ற தந்தை!

  • IndiaGlitz, [Wednesday,April 27 2022]

ஆம்புலன்ஸ் டிரைவர் கேட்ட தொகையை கொடுக்க முடியாததால் மகனின் உடலை இரு சக்கர வாகனத்தில் தோளில் சுமந்து சென்ற ஏழை தந்தை குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பகுதியை சேர்ந்த நரசிம்முலு மகன் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் தனது மகனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அரசின் அமரர் ஊர்தி சேவைக்காக காத்திருந்தார். ஆனால் அமரர் ஊர்தி வராததால் அவர் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். ஆனால் ஆம்புலன்ஸ் டிரைவர் 20 ஆயிரம் ரூபாய் கேட்டதால் அவரிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை.

இதனை அடுத்து தனது நண்பர் கிஷோர் என்பவரின் மூலம் குறைந்த விலையில் ஆம்புலன்சை ஏற்பாடு செய்தார். ஆனால் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கிஷோர் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸில் உடலை ஏற்றுவதை தடுத்ததால் வேறு வழியின்றி கிஷோரின் டிரைவர் இருசக்கர வாகனத்தை ஏற்பாடு செய்தார். இதனை அடுத்து நரசிம்மலு தனது மகனின் உடலை தோளில் ஏந்திக் கொண்டு இருசக்கர வாகனத்திலேயே தனது சொந்த ஊருக்கு மகனின் உடலை எடுத்துச் சென்றதாக தெரிகிறது .

இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த சம்பவத்தை ஆந்திர மாநில முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.