கொரோனாவிடம் இருந்து தப்பித்த சென்னையின் 2 மண்டலங்கள்: எப்படி சாத்தியமாயிற்று

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா, டெல்லியை அடுத்து தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் தான் மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் மொத்தம் 216 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இதில் மிக அதிகமாக ராயபுரத்தில் 64 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் இருந்தாலும் இதில் 13 மண்டலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. ஆனால் அம்பத்தூர் மற்றும் மணலி ஆகிய இரண்டு மண்டலங்களில் மட்டும் ஒருவரை கூட கொரோனா பாதிக்கவில்லை என்பது ஆச்சரியம் மற்றும் சந்தோசமான செய்தியாக உள்ளது.

அம்பத்தூர் மண்டலத்தில் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், கள்ளிகுப்பம், அண்ணாநகர் மேற்கு விரிவு, முகப்பேர், புதூர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் மக்கள் தொகை அதிகமாக இருந்தாலும் கொரோனா பாதிப்பு இல்லாதது ஆச்சரியமான ஒன்றே. அதே போல் மணலியை சுற்றியுள்ள மண்டலங்களில் கொரோனா பாதிப்பு இருந்தும் மணலியில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் தமிழகத்தை கொரோனா பாதிக்கப் தொடங்கியபோதே இந்த இரண்டு மண்டலங்களை சேர்ந்த அதிகாரிகள் தனிமனித விலகல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் என்பதும் காவல்துறையினரும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்ததாகவும், ஊரடங்கு உத்தரவின் போது இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் வெளியே வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த இரண்டு மண்டலங்களை மட்டும் கொரோனா வைரஸ் நெருங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.