திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற மாறுவேடத்தில் காவல்துறை அதிகாரி. புகைப்பட ஆதாரம்

  • IndiaGlitz, [Sunday,February 19 2017]

தமிழக சட்டமன்றத்தில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற பெயரில் நடந்த ஜனநாயக கேலிக்கூத்தை அனைவரும் அறிவோம். அரசியல் விமர்சகர்கள், பொதுமக்கள், திரையுலகினர் அனைவரும் நேற்று சட்டசபையில் நிகழ்ந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றியது சட்டசபை மாண்புக்கு முரணானது என்பது என்றும், அவர்களை வெளியேற்ற தமிழக காவல்துறையினர்களையும் பயன்படுத்தியதாகவும் அனைவரும் குற்றம்சாட்டினர்

ஆனால் தமிழக அரசின் தரப்பில் இருந்து சட்டசபை காவலர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும், தமிழக காவல்துறை இந்த நடவடிக்கையில் திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றுவதில் ஈடுபடவில்லை என்றும் விளக்கம் கொடுத்தது.

ஆனால் தமிழக காவல்துறையினர்களும் சேர்ந்துதான் திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றினர் என்பதற்கான புகைப்பட ஆதாரம் சமூக இணையதளங்களில் வெளியாகியுள்ளது. அம்பத்தூரை சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரி ஒருவர் சட்டசபை மார்ஷல் உடையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இவருக்கு சட்டசபை செயலாளரிடம் இருந்து எழுத்துபூர்வமான உத்தரவும் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த 87ஆம் ஆண்டு ஜானகி ராமச்சந்திரனின் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் இதேபோன்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.