இதுதான் கடைசி போட்டி… சிஎஸ்கே முக்கிய வீரர் ஓய்வை அறிவித்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் இன்று நடைபெறவுள்ள நிலையில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் ஒருவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் மோதவுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த முக்கிய வீரரான அம்பதி ராயுடு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாகவும் தனது முடிவில் இனிமேல் மாற்றமில்லை என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் வீரரான அம்பதி ராயுடு இதுவரை 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10 அரை சதங்களுடன் 1694 ரன்களை அடித்துள்ளார். மேலும் 2010 இல் மும்பை இந்தியன்ஸ் அணி மூலம் ஐபிஎல் தொடருக்கு அறிமுகமான அம்பதி ராயுடு 2017 வரை அந்த அணியில் இடம்பெற்று விளையாடி வந்தார். பின்னர் 2018 இல் சிஎஸ்கே அணி அவரை ரூ-2.2 கோடிக்கு ஏலம் எடுத்த நிலையில் அந்த ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

தொடர்ந்து 2022 இல் சிஎஸ்கே இவரை ரூ.16.75 கோடிக்கு விலைக்கு வாங்கிய நிலையில் 16 ஆவது ஐபிஎல் சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 105 பந்துகளுக்கு 139 ரன்களை எடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தனது டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், 2 சிறந்த அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக 204 போட்டிகளில் விளையாடியுள்ளேன். 14 சீசன்கள் 11 பிளே ஆஃப்கள், 8 இறுதிப்போட்டிகள், 5 கோப்பைகள், ஆறாவது இரவு என்று நம்புகிறேன். இது ஒரு அற்புதமான பயணம், இன்றிரவு நடக்கும் இறுதிப்போட்டியில் ஐபிஎல் தொடர்களில் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளேன். இந்த சிறந்த டோர்னமென்டில் ஆடியதை நான் மிகவும் ரசித்தேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. இனி யூடர்ன் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 2019 இல் ஒருநாள் உலகக்கோப்பை அணிக்கு தேர்வுசெய்ப்படாத நிலையில் அதிருப்தி அம்பதி ராயுடு அனைத்துப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பை வாபஸ் வாங்கிய நிலையில் கடந்த 2022 இல் 15 ஆவது சீசன் போட்டியின் கடைசி ஆட்டத்தின்போது இதேபோன்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் சிஎஸ்கே நிர்வாகத்தின் தலையீட்டால் அவரது அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. தற்போது மீண்டும் யூடர்ன் கிடையாது என்று அம்பதி ராயுடு தனது ஓய்வை அறிவித்து இருப்பதால் ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.