கொரோனாவை பரப்பியதாக அமேசான் நிறுவனத்தின்மீது தொடரப்பட்ட வழக்கு!!! பரபரப்பு கட்டத்தில் ஆன்லைன் வர்த்தகம்!!!
- IndiaGlitz, [Thursday,June 04 2020]
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள புரூக்ளினில் பெடரல் நீதிமன்றத்தில் அமேசான்.காம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் அமேசான் நிறுவனத்தின் ஊழியர்கள் கொரோனா வைரஸ் பரவலை ஊக்கப் படுத்துவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தின் ஊழியர்கள் தினமும் ஒருவராவது கொரோனா நோயை பரப்புகிறார்கள் என விளக்கம் அளிக்கப்பட்ட அந்த வழக்கில் ஸ்டேட்டன் தீவில் உள்ள 3 அமேசான் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது. ஸ்டேட்டன் தீவில் உள்ள ஒரு குடும்பம்தான் இந்த வழக்கைத் தொடுத்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமேசான் கிளைப் பகுதியான KFJ8 இல் இருந்து ஒரு ஊழியர் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி ஒரு பார்சலை கொண்டு வந்து கொடுத்ததாகவும் அதனால் பார்பரா சாண்டலர் என்பவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும் அக்குடும்பம் வழக்குத் தொடர்ந்து இருக்கிறது. மேலும் பார்பரா கொரோனா நோய்த்தொற்றால் இறந்துவிட்டார் எனவும் அவர் மூலமாக குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த வழக்கில் கூறப்பட்டு உள்ளது. அமேசான் நிறுவனத்தின் மீது புகார் வந்தவுடன் அந்நிறுவனம் KFJ8 அலுவலகத்தை முற்றிலும் முடக்கியிருக்கிறது.
ஆன்லைன் வர்த்தகத்தில் தற்போது அதிகபடியான தள்ளுபடிகள் வழங்கப் படுகின்றன. எனவே வாடிக்கையாளர்கள் அதிகமாக அதில் பொருட்களை வாங்கியும் வருகின்றனர். இந்நிலையில் அந்நிறுவனம் ஊழியர்களை மிகவும் வேகமாக பணியாற்றுமாறு நிர்பந்திப்பதாகவும் அதனால் ஊழியர்கள் சுகாதார மேம்பாடுகளை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை எனவும் வழக்கில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த வழக்கை குறித்து அமேசான் நிறுவனம் எந்த விளக்கத்தையும் இதுவரை அளிக்க வில்லை எனக் கூறப்படுகிறது.
அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெஃப் பெசோஸ் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் ஊழியர்கள் சுகாதாரமற்ற முறையில் பணியாற்றுவதை ஒப்புக்கொள்ள முடியாது எனத் தெரிவித்து இருந்தார். மேலும் கொரோனா நிவாரண நிதியாக அந்நிறுவனம் இதுவரை 800 மில்லியன் டாலர்களை வழங்கியிருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் தற்போது அந்நிறுவனத்தில் பணியாற்றும் 800 ஊழியர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பதாக மறைமுகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. மேலும் 2019 கணக்கின்படி அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக 798,000 முழு நேர ஊழியர்கள் மற்றும் பகுதி நேர ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.