டீ- addict-ஆ நீங்க? உங்களுக்கான தீர்வு 'வெள்ளை-டீ'… கண்டிப்பா டிரை பண்ணுங்க…
- IndiaGlitz, [Wednesday,June 21 2023]
நம்மூரில் டீ-க்கு அடிமையாகாத ஆசாமிகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் தலைவலியா? ஒரு டீ குடிப்போம்… சலிப்பா இருக்கா? ஒரு டீ குடிப்போம்… வீட்டை விட்டு வெளியே போறோமா? ஒரு குடிப்போம்… என்று சதா சர்வகாலமும் பால் கலந்த வெள்ளை டீக்கு பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கிறோம்.
அதுவும் சிலர் டீ குடிக்கவில்லை என்றால் அந்த நாளே இருண்டுபோய் விட்ட மாதிரி நினைக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் டீ குடித்தால்தான் காலை கடனையே கழிக்க முடியும் என்பதுபோன்ற உணர்வுடனேயே வாழ்ந்தும் வருகின்றனர். இப்படி ஒரு நாளைக்கு 5-10 டீக்களை குடித்தே உயிர் வாழ்ந்து வரும் ஜீவன்களும் நம்முடைய ஊரில் வாழத்தான் செய்கின்றனர்.
உண்மையில் டீ குடிப்பதால் அதிலுள்ள ஆண்டி அக்ஸிடென்ஸ் மூலம் ஒரு புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் பெற முடிந்தாலும் அதிகளவில் டீ குடிப்பதால் பல பிரச்சனை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படி டீக்கு அடிமையாகி அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் நம்மை போன்றவர்களுக்குத்தான் இந்தப் பதிவு.
பொதுவாக டீ-யில் பால் கலந்த டீ, பிளாக் டீ, க்ரீன் டீ, இஞ்சி டீ, மசாலா டீ என்று பல விதமான டீக்களை நீங்கள் அருந்தி இருப்பீர்கள். இந்த டீக்கள் அனைத்தும் தேயிலையினால் செய்யப்பட்ட டீ தூளைப் பயன்படுத்தியே செய்கிறோம்.
அதே தேயிலையைப் பயன்படுத்தி போடக் கூடியதுதான் இந்த வெள்ளை டீ. ஆனால் மற்ற டீக்களை விட வெள்ளை டீ உடலுக்கு நன்மைத் தரக்கூடியது. இதை அருந்துவதால் துளிகூட உடலுக்கு கெடுதல் இல்லை. அனைத்து வயதினரும் விரும்பி இந்த டீயைக் குடிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெள்ளை டீ தூள் தயாரிப்பு முறை
பொதுவாக தேயிலைச் செடியிலிருந்து 3 இலைகளைக் கிள்ளி சரியான முறையில் பதப்படுத்தி, பின்பு அரைத்து, டீ தூள் தயாரிக்கின்றனர். அதில் இரண்டு இலையை மட்டும் எடுத்து, இயற்கையான முறையில் பதப்படுத்தி, உருவாக்கப்படுவது க்ரீன் டீ. ஆனால் தேயிலை செடியில் உள்ள ஒரே ஒரு நுனியை மட்டும் கிள்ளி எடுத்து, பதப்படுத்தி உருவாக்கப்படுவதுதான் வெள்ளை டீ.
அந்த ஒரு இலையையும் மற்ற இலைகளைப் போன்று எடுக்காமல் வசந்த காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்பு காலை 3 – 5 மணி அளவில் ஈரப்பதத்துடன் மொட்டுகளைக் கிள்ளி, பின்பு அந்த ஈரப்பதத்தை எடுத்துவிட்டு, அரைக்காமல் அப்படியே பேக் செய்துவிடுவதுதான் வெள்ளை டீ. இதனால் மற்ற டீ தூளை காட்டிலும் மார்க்கெட்டில் இதற்கு அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.
வெள்ளை டீ தயாரிக்கும் முறை
வெள்ளை – டீக்காக பதப்படுத்தப்பட்ட இலையைக் கொண்டு டீ தயாரிக்கலாம். ஆனால் இந்த டீயில் பாலையோ மற்ற பொருட்களையோ பயன்படுத்தக் கூடாது. முக்கியமாக டீயை வடிகட்டி அருந்தக் கூடாது.
வெள்ளை டீயை தயாரிப்பதற்கு குறைந்த பட்சம் 5-6 இலைகள் இருந்தால் மட்டும் போதுமானது. அரை லிட்டர் தண்ணீரை பாத்திரத்தில் வைத்து 70 டிகிரி வெப்ப நிலையில் அதாவது அடி பாத்திரம் மட்டும் சூடாகும் அளவிற்கு தண்ணீரை சூடு செய்துகொண்டு, இலையைப் போட்டு வைத்து, அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
இனிப்பு வேண்டுமென்றால் தேன் அல்லது நாட்டுச்சர்க்கரையை சேர்த்துக்கொள்ளலாம். இதில் எலுமிச்சை பழச்சாறு பிழிந்தும் அருந்தலாம். இன்னும் கூடுதலான சுவை கிடைக்கும்
சூடாக அருந்த நினைப்பவர்கள் அந்த தண்ணீரை எடுத்து அருந்தலாம். அல்லது சூடு குறைந்த பிறகு அருந்தும்போது இன்னும் அந்த டீ சுவையாக இருக்கும்.
காரணம் குறைந்த அளவு சூடாகியிருக்கும் தண்ணீரில் தேயிலை இலைகளைப் போட்டு வைத்திருக்கிறோம். இதனால் மெது மெதுவாக அந்த இலையின் சாறு தண்ணீரில் இறங்கி டீயின் உண்மையான சுவை கூடும்.
வெள்ளை டீயில் தண்ணீரை அதிகம் சூடாக்காமல் குறைந்த அளவு சூடாக்குவதால் அதன் தன்மை கெட்டுப்போவதில்லை. முதலில் டீ வாசனை வரும். ஆனால் அருந்த அருந்த அது பழகிவிடும். மேலும் உண்மையான டீயின் குணத்தை மட்டும் பெறுவதால் இந்த வெள்ளை டீயில் உடல்நலத்திற்கு கேடான எந்த விஷயமும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மருத்துவப் பயன்கள்
வெள்ளை டீயில் 20-30% உயர் ஆண்டி ஆக்ஸிடண்ட் தன்மை இருக்கிறது. இதனால் கல்லீரல் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.
மேலும் இதிலுள்ள ஃப்ரீ ரேட்டிகல்கள் கெட்ட செல்களை அழிக்கும், புதிய செல்களை உருவாக்கும்.
வெள்ளை டீயில் கேட்சின்கல் இருப்பதால் நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இது இரத்த அழுத்தத்தைக் குறைந்து உடலை வலுப்பெற செய்கிறது.
வயதான தோற்றத்தை மாற்றுவதிலும் உடலுக்கு சிறந்த பொழிவை தருவதிலும் வெள்ளை டீக்கு நிகர் வேறெதுமே இல்லை.
வாய் துர்நாற்றத்தைப் போக்கவும் சொத்தை பல் பிரச்சனையை தவிர்க்கவும் இந்த வெள்ளை டீ பயன்படுகிறது. மேலும் பற்களுக்கு வெண்மையையும் கொடுத்து பாக்டீரியாக்களை அழிக்கிறது.
தொடர்ந்து வெள்ளை டீ அருந்தி வந்தால் ரத்தம் ஒட்டம் சீராகி தலைமுடி வளர்வதற்கும் உதவி புரிகிறது.
உடல் எடையை குறைக்கவும் இருதயநோய் தாக்கத்தை குறைக்கவும் வெள்ளை டீ சிறந்த உக்தி.
இதிலுள்ள பாலிபெனால் ரத்த உறுப்புகளை சீராக்கி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்
மன அழுத்தம் நீங்கி, தூக்கமின்றி இருப்பவர்களுக்கு இந்த வெள்ளை டீ சிறந்த பலனை கொடுக்கும் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் புத்துணர்ச்சியை தருவதோடு உடலுக்கு வலிமையைக் கொடுத்து எலும்பு வலுப்பெறுவதற்கு உதவுகிறது.
புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை இந்த வெள்ளை டீயில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
எல்லா வயதினரும் இந்த வெள்ளை டீயை குடிக்கலாம். ஆனால் கர்ப்பிணி பெண்கள் இதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்த வெள்ளை டீயை குடிக்கும்போது நெஞ்செரிச்சல் இருக்காது. இந்த டீ நிறம் மாறாமல் அப்படியே உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை மட்டும் கொடுக்கும். இந்த டீயை ஒரு நாளைக்கு 3-4 கப் வரை எடுத்துக்கொள்ளலாம் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.