தயாரிப்பாளராக மாறியது ஏன்? அமலாபால் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சாதாரண பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரம் மற்றும் ஸ்டைலான கதாபாத்திரங்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த அமலாபால் தற்போது, வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அவரது அடுத்த படமான 'கடவர்' படத்தில் தடய நோயியல் நிபுணர் டாக்டர் பத்ராவாக நடிக்கிறார் அமலா பால்.
இந்த கேரக்டரில் நடிப்பது குறித்து அமலாபால் கூறியதாவது: "ஒரு கலைஞராக, கடந்த காலத்தில் ஸ்டைலான மற்றும் வணிகரீதியான கதாபாத்திரங்களில் நடித்தேன். இப்போது என்னை நடிகையாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் தெளிவு கிடைத்திருப்பதாக நம்புகிறேன். ஒரு நடிகையாக என்னை உந்தும் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் ரசிக்கிறேன். அத்தகைய ஒரு முடிவை எடுத்த பிறகு 'அதோ அந்த பறவை போல', 'ஆடை' படங்களுக்கு பிறகு 'கடவர்' கதையை கேட்டேன். இதுவரை பார்த்திராத மற்றும் கேட்டிராத பல புதிய விஷயங்களை கொண்ட ஒரு கதையாக இருந்தது 'கடவர்'. நான் இந்த படத்தில் ஒரு தடய நோயியல் நிபுணராக நடிக்கிறேன். இதில் நடிக்க நான் நிறைய தயாராக வேண்டி இருந்தது. ஏனெனில் நாம் திரைப்படங்களில் பார்த்த வழக்கமான விசாரணைகள் போல இது இருக்காது. கேரளாவின் மிகவும் பிரபலமான தடய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் உமா டத்தனால் எழுதப்பட்ட 'ஒரு போலீஸ் சர்ஜூனோடே ஓர்மகுறிப்புகள்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கதாபாத்திரத்துக்கு தயாராவதற்கு அந்த புத்தகத்தை வாசித்ததோடு மட்டுமல்லாமல், அந்த தொழிலை பற்றிய மேலும் நுணுக்கமான அறிவைப் பெற ஒரு தடய அறுவை சிகிச்சை நிபுணருடன் இரண்டு நாட்கள் செலவிட்டேன்" என்று கூறினார்.
மேலும் இந்த படத்தின் ஒரு இணை தயாரிப்பாளராக மாறியது குறித்து அமலா பால் கூறும்போது, "இந்த படத்தை ஒரு குறைந்த பட்ஜெட்டில் எடுக்க முடியாது, ஏனெனில் பல காரணிகள் உள்ளன. ஒரு நடிகையாக பின்னால் இருந்து இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் என்று உணர்ந்தேன். என்னை போலவே இந்த படத்தின் மீது மிகுந்த நம்பிக்கையையை வைத்திருந்த என் தயாரிப்பாளர்களான அஜய் பணிக்கர் மற்றும் பிரதீப் ஆகியோருக்கு ஆதரவாக இருக்க விரும்பினேன். என்னை ஒரு இணை தயாரிப்பாளராக ஏற்றுக் கொண்டதற்காக அவர்களுக்கு நன்றி. நாங்கள் பொதுவான பார்வையை பகிர்ந்து கொள்கிறோம், எங்கள் நோக்கங்கள் தெளிவாக உள்ளன. நல்ல கதை மற்றும் தயாரிப்பில் தரத்தை உயர்த்துவதற்கு இன்னும் பல படங்களை இணைந்து செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம். இயக்குனர் அனூப் பணிக்கர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை ஆகியோர் திரைக்கதையில் குறிப்பிடத்தக்க வேலைகளை செய்துள்ளனர். அவர்களின் முன் தயாரிப்பு முயற்சிகளால் குறித்த நேரத்தில் படப்பிடிப்பை முடித்து விடுவோம் என நம்புகிறேன். எங்களது முதல் தயாரிப்பு பாக்ஸ் ஆபிஸிலும் சாதனைகளை செய்யும் என நிச்சயமாக சொல்ல முடியும். இப்படி ஒரு படத்தில் எனக்கு வாய்ப்பளித்த APJ ஃபிலிம்ஸ் அஜய் பணிக்கர் மற்றும் ஒயிட் ஸ்கிரீன் பிரதீப் ஆகியோருக்கு நன்றி" என்று அமலாபால் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments