அப்படி என்ன விஷேசமான டின்னர்? பாலியல் தொல்லை பிரச்சனை குறித்து அமலாபால் விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,February 13 2018]

சமீபத்தில் சென்னை தொழிலதிபர் ஒருவர் நடிகை அமலாபாலை பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் அமலாபால் குறித்தும் அவருடைய மேனேஜர் குறித்தும் ஒருசில ஊடகங்களில் அவதூறான செய்தி வெளிவந்து கொண்டிருப்பதை அடுத்து சம்பவம் நடந்த ஜனவரி 31ஆம் தேதி நடந்தது என்ன என்பது குறித்து விரிவான அறிக்கை ஒன்றை அமலாபால் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

ஜனவரி 31-ம் தேதி சென்னையில் ஒரு டான்ஸ் ஸ்டூடியோவில் நான் நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவர் என்னை அணுகி, நடன நிகழ்ச்சியை பற்றி ஒரு சில முக்கிய விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று கூறினார். மலேசியாவில் பிப்ரவரி 3-ம் தேதி நடக்கும் விழாவுக்கு பிறகு அவருடன் இரவு உணவில் கலந்துகொள்ள அழைத்தார். அப்படி என்ன விஷேசமான டின்னர் என நான் அவரை குறுக்கு கேள்வி கேட்டபோது, அவர் அலட்சியமாக உனக்கு தெரியாதா? என்ற பாணியில் பேசினார். நாங்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் எங்களை சுற்றி யாரும் இல்லாததால் நான் கலவரமானேன்.

அந்த மனிதர் ஸ்டூடியோவுக்கு வெளியில் போய், என்னுடைய நல்ல முடிவுக்காக காத்திருப்பதாக சொன்னார். நான் என் நலம் விரும்பிகள், வேலையாட்களை என்னை மீட்க அழைத்தேன். அவர்கள் அங்கு வந்து சேர்வதற்கு அரை மணி நேரம் ஆனது. அந்த மனிதரோ அவரின் வழக்கமான தொழில் பேரத்தை பேசுவதை போல, சாதாரணமாக ஸ்டூடியோவுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தார். என்னுடைய ஆட்கள் அவரை நோக்கி போன போது, அவர் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்க, ‘அவளுக்கு விருப்பமில்லைனா ‘இல்லை'னு சொல்லலாமே, இது என்ன பெரிய விஷயமா? என்றார்.

எங்கள் குழுவினரை தள்ளிவிட்டு, தப்பி ஓட முயன்றவரை பிடித்து ஸ்டூடியோவில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். இந்த விஷயங்கள் நடந்து கொண்டிருந்தபோது தான், அவர் ஒரு திட்டமிட்டு செக்ஸ் மோசடி செய்யும் நபர் என்பதை உணர்ந்தேன். அவரின் செல்போனில் என்னுடைய சமீபத்திய மொபைல் நம்பர், மற்றும் அந்த விழாவில் கலந்து கொள்ளும் நடிகைகளுடைய விவரங்கள் அனைத்தும் இருந்தன. காவல் துறையினர் வந்தபோது, ஸ்டூடியோவுக்கு அருகில் இருந்தவர்கள் தொல்லை செய்வதாக கொடுத்த புகாரின்பேரில் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தோம்.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நானும் காவல் நிலையத்துக்கு விரைந்து சென்றேன். இந்த பிரச்சினையில் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுத்த காவல் துறைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விசாரணையில் பல்வேறு ஆதாரங்களை திரட்டியதோடு, இந்த மோசடியில் அச்சாணியாக செயல்பட்ட இரண்டு பேரையும் கைது செய்திருக்கிறார்கள்.

சந்தேகத்தின் பிடியில் இருக்கும் இன்னும் சில பேரை கைது செய்ய பிடி வாரண்டுகளும் தயார் நிலையில் உள்ளன. அதோடு, அவர்களது விசாரணையை மேலும் துரிதப்படுத்தி, இந்த மோசடியில் யாரெல்லாம் உடந்தை என்பதையும் வெளிக்கொண்டு வரவேண்டுகிறேன். ஒரு சில மீடியாக்கள் அந்த நாளில் என்ன நடந்தது? என்பதையும், யார் குற்றவாளி? என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளாமலேயே, என்னை பற்றியும், என் மேனேஜரை பற்றியும் தவறான செய்தியை பரப்புகிறார்கள். விசாரணை நடந்து வருகிறது, அதற்கு தடையாக நான் இருக்கக் கூடாது என்பதாலேயே நான் அமைதி காத்து வருகிறேன். ஆனால் அந்த மாதிரி கீழ்த்தரமாக செய்தி வெளியிடும் மீடியாக்கள் மீது அவதூறு வழக்கு தொடரவும் தயங்க மாட்டேன். சென்னை போலீசின் விசாரணையில் எங்கள் குழு மீதோ, மேனேஜர் பிரதீப்குமார் மீதோ எந்த தவறும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு நடிகை அமலாபால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.