காஷ்மீர் பிரச்சனை: அமலாபாலுக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்

  • IndiaGlitz, [Tuesday,August 06 2019]

காஷ்மீர் மாநிலத்தில் 370ஆவது சிறப்பு அந்தஸ்தை நேற்று மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டு யூனியன்களாக பிரிக்க முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து இது குறித்த விவாதங்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகை அமலாபால் 'மத்திய அரசின் இந்த முடிவு ஆரோக்கியமான ஒரு முடிவு என்றும் இதுபோன்ற துணிச்சலான நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என்றும் நாடு சமாதானம் பெற வேண்டுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அமலாபாலின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு கமெண்டுக்கள் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'நாடு அழிவை நோக்கி பயணிக்கும் ஒருவரின் தலைமையை கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை முற்றிலும் திசை திருப்பும் வேலையாகும். இதையெல்லாம் தெரிந்து கொண்டே தான் செய்கின்றார்கள்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் காஷ்மீர் குறித்த நடவடிக்கைக்கு ஆதரவாக அமலாபாலும், எதிர்ப்பாக சித்தார்த்தும் தங்களது சமூக வலை தளங்களில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இருவரும் இணைந்து 'காதலில் சொதப்புவது எப்படி?' படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.