தமிழ் குறித்த சர்ச்சை: பிரபல இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட அல்போன்ஸ் புத்திரன்!

  • IndiaGlitz, [Thursday,July 29 2021]

தமிழ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதற்காக பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் மன்னிப்பு கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவான ’சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் தமிழ் குறித்து காட்டியதில் அவருக்கும் எனக்கும் சின்ன பிரச்சனை ஏற்பட்டது என்பதை நீண்ட நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தேன். அது என்னுடைய தனிப்பட்ட கருத்து. தமிழர்களை களங்கப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் அல்ல. அவர் ஷங்கர் படத்தின் பாடல்கள் மற்றும் ஆக்சன் காட்சிகளால் கவரப்பட்டு தனது படத்தில் காட்சிகளை வைப்பதாக கூறியதை கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே என்னுடைய கருத்துக்களுக்கு நான் தற்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

ரோஹித் ஷெட்டியின் ‘சிங்கம்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் அரசியல் கட்சிகளிடம் பணம் பெறுவது போன்ற ஒரு காட்சியில் நாயகனின் அம்மா கோபப்படும் காட்சியை பார்த்து நான் அழுதுவிட்டேன். நாயகன் தன் தாயிடம் தோற்றுப் போகும் அந்த காட்சி என்னை மிகவும் கவர்ந்தது. நான் பார்த்த படங்களிலேயே அப்படி ஒரு காட்சியை நான் பார்த்ததே இல்லை. அது போன்ற காட்சியை அமைத்த அவருக்கு எனது மரியாதையை சமர்ப்பணம் செய்கிறேன். அவருடைய அனைத்து படங்களும் எனக்கு பிடிக்கும். தற்போது அவர் இயக்கி வரும் சூரியவன்ஷி படத்திற்காக காத்திருக்கின்றேன். இந்த இளைய சகோதரனை மன்னிக்கவும்’ என்று அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்

’நேரம்’ ‘பிரேமம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள அல்போன்ஸ் புத்திரன் தற்போது பகத் பாசில், நயன்தாரா நடித்து வரும் ‘பாட்டு’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.