அல்போன்ஸ் புத்திரனின் அலட்சிய படைப்புதான் 'பிரேமம்' நடுவர் குழு தலைவரின் சர்ச்சை கருத்து
- IndiaGlitz, [Thursday,March 03 2016]
சமீபத்தில் கேரள அரசு திரைப்பட விருதுகளை அறிவித்திருந்த நிலையில் கேரளாவிலும், தமிழகத்திலும் சூப்பர் ஹிட் ஆன 'பிரேமம்' படத்திற்கு ஒரு விருதுகூட கிடைக்காமல் போனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரு மாபெரும் வெற்றி படத்திற்கு விருது வழங்காதது குறித்து பலர் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். கோலிவுட் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 'பிரேமம்' படத்திற்கு ஏன் விருது வழங்கவில்லை என்பது குறித்து கேரள மாநில விருதுகள் பிரிவின் நடுவர் குழு தலைவர் தெரிவித்துள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவர் கூறியது இதுதான்: 'பிரேமம்' சிறந்த பொழுதுபோக்குப் படம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மாநில விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கும்போது சில அளவுகோல்கள் உள்ளன. அந்த அளவுகோல்களுக்கு ஏற்ப 'பிரேமம்' இல்லை ஏனென்றால் அந்தப் படத்தின் உருவாக்கமும் கச்சிதமாக இல்லை.
இதற்கு அல்ஃபோன்ஸ் புத்திரனுக்கு படம் எடுக்கத் தெரியாது என்பது பொருள் அல்ல. அவரது முந்தைய படமான 'நேரம்' கச்சிதமான படம். ஆனால் 'பிரேமம்' படத்தை பார்க்கும்போது அதன் திரைப்படமாக்கலில் அல்போன்ஸின் அலட்சியமான அணுகுமுறையே தெரிகிறது. அதனால்தான் தேர்வின்போது ஒரு பிரிவில் கூட 'பிரேமம்' தேர்ந்தெடுக்கப்படவில்லை" என்று கூறியுள்ளார்.
நடுவர் குழு தலைவரின் இந்த கருத்து எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றியதுபோல் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.