புதிய தலைமுறை விவாதத்தில் அமீர் பேசியது என்ன?
- IndiaGlitz, [Wednesday,June 13 2018]
சமீபத்தில் கோவையில் புதிய தலைமுறை ஏற்பாடு செய்த வட்டமேஜை விவாத நிகழ்ச்சியில் தமிழிசை செளந்திரராஜன், இயக்குனர் அமீர், தனியரசு எம்.எல்.ஏ, ஞானதேசிகன், செம்மலை, டி.கே.எஸ் இளங்கோவன், உள்பட ஒருசிலர் கலந்து கொண்டனர். இந்த விவாத நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குனர் அமீர் மீதும், இந்த நிகழ்ச்சியை நடத்திய புதிய தலைமுறை மீதும் காவல்துறையினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த விவாதத்தில் இயக்குனர் அமீர் பேசியது என்ன? என்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த அலூர் ஷானவாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது: தூத்துகுடியில் 144 தடை உத்தர்வு போடப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோதமாக மக்கள் கூடியதும், கலவரம் செய்ததும் தவறு என்பதால் அங்கு துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிலை வந்ததாக தமிழிசை கூறியதாகவும், அதற்கு அமீர், 'இதே கோவையில் சசிகுமார் படுகொலை செய்யப்பட்டபோது அவரது சவ ஊர்வலத்தின்போது பாஜகவினர் கலவரம் செய்தார்களே, அப்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதா? என்ற கேள்வியை எழுப்பியதாகவும் அலூர் ஷானவாஸ் கூறினார்.
அமீர் இவ்வாறு கேள்வி எழுப்பியதும் அரங்கத்தில் இருந்த பாஜக, ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை சேர்ந்தவர்கள் கத்தி கூச்சலிட்டதாகவும், இதன் காரணமாக அந்த நிகழ்ச்சி குழப்பம் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் போலீசார் தலையிட்ட பின்னர் அமைதி திரும்பியதாகவும் அலூர் ஷானாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பாஜகவினர் கூச்சல் குழப்பம் விளைவித்த வீடியோவை வெளியிடாமல் புதிய தலைமுறை மறைத்துவிட்டது குறித்து தனக்கு வருத்தம் என்றும் அவர் தெரிவித்தார்.