ரகுராம்ராஜனுக்கு பாடம் நடத்திய ஐ.டி.பேராசிரியர் இவர் என்றால் நம்ப முடிகிறதா?
- IndiaGlitz, [Friday,May 26 2017]
முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம்ராஜன் அவர்களுக்கு பாடம் எடுத்த கல்லூரி பேராசிரியர் மேலே உள்ள படத்தில் உள்ளவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை
டெல்லியில் எஞ்சினியரிங் படிப்பு, அதன் பின்னர் மாஸ்டர் டிகிரி மற்றும் ஹூஸ்டன் நகரில் பி.எச்.டி படிப்பு முடித்த இவரது பெயர் அலோக் சாகர். மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியினர் வாழும் கிராமம் ஒன்றில் கடந்த 32 ஆண்டுகளாக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து அந்த பகுதி மக்களுக்காக சேவை செய்து வருகிறார்.
முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் உள்பட பல விஐபிக்கள் இவரிடம் படித்தவர்கள். பேராசிரியர் வேலையில் திருப்தி இல்லாததால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு கோச்சாமு என்ற 750 பழங்குடியினர் வாழும் ஒரு சிறு கிராமத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். அந்த கிராமத்தில் சரியான சாலை வசதி, மின்சார வசதி, பள்ளிக்கூட வசதி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் வாழும் கிராமத்தில் சுமார் 50,000 மரங்களை நட்டுள்ளார். இந்திய மக்கள் தினந்தோறும் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பட்டம் வாங்கி தங்களுடைய புத்திசாலித்தனத்தை நிரூபிக்கவே அவர்கள் போராடி வருகிறார். சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை பலருக்கு இல்லை என்று அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அலோக் அவர்களிடம் இருப்பது மூன்றே மூன்று செட் உடைகள் மற்றும் ஒரு சைக்கிள்தான் அவருடைய இப்போதைய சொத்து. தினந்தோறும் பல்வேறு வகையான விதைகளை சேகரித்து அப்பகுதி மக்களிடம் கொடுத்து செடியாக்க சொல்வதே இவருடைய தினப்பணி. இவருடைய சேவையை பல ஊடகங்கள் பாராட்டி வருகின்றன.