இந்தியா முழுக்க 150 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கா? சென்னை, கோவைக்கும் வாய்ப்பா?
- IndiaGlitz, [Wednesday,April 28 2021]
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தற்போது பீதியை கிளப்பி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று அதற்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. அதோடு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 15 ஆவது நாளாக 3 லட்சத்தை தாண்டி உள்ளது.
இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அதிக பாதிப்பு உள்ள 150 மாவட்டங்களில் முழுபொது ஊரடங்கினை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உயர்மட்ட அதிகாரிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டவுடன் 15% அதிகப் பாதிப்பு உள்ள இந்தியாவின் 150 மாவட்டங்களில் முழுபொது ஊரடங்கு கொண்டு வரப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இப்படி 15% அதிகப் பாதிப்பு எண்ணிக்கை உள்ள மாவட்டங்களின் வரிசையில் சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு போன்ற தமிழக மாவட்டங்களும் அடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 20 ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அடுத்து கடந்த 26 ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளில் பல கடுமையான விதிமுறைகளும் கொண்டு வரப்பட்டன
தமிழகத்தில் இத்தகைய விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போதே தற்போது மத்திய அரசு நாடு முழுவதும் 15% அதிக பாதிப்பு உள்ள 150 மாவட்டங்களுக்கு முழுபொது ஊரடங்கு அமல்படுத்த உள்ளது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அதுதவிர வரும் மே 1,2 ஆகிய தேதிகளில் முழு பொது ஊரடங்கு அமல்படுத்தப் படலாம் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்து வருகிறது