பெட்ரோல்-டீசல் விலை சரியும்… உற்பத்தி குறித்து வெளியான அதிரடி தகவல்!
- IndiaGlitz, [Monday,July 19 2021]
தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 2 மில்லியன் பேரல்கள் அளவில் உயர்த்த ஒபேக் நாடுகள் முடிவெடுத்து உள்ளன. இதனால் பெட்ரோல், டீசல் விலை சற்று சரிய வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் கூறப்படுகின்றன.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் ஒபேக் மற்றும் அதன் கூட்டு நாடுகள் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 10 மில்லியன் பேரல்கள் வரை குறைத்தன. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. தட்டுப்பாடு காரணமாக விலை ஏற்றம் உருவானது.
அதிலும் இந்தியா போன்ற சில நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றில் விலை உயர்வு அதிகரித்து உள்ளன. இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டி இருக்கும்போது அதையொட்டி போக்குவரத்து மற்றும் காய்கறிகளின் விலையும் உயர்ந்து இருக்கிறது. இதனால் அத்யாவசியப் பொருட்களின் விலையில் கடும் மாற்றம் ஏற்பட்டு மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஒபேக் நாடுகளின் கூட்டமைப்பில் புதிய வரைமுறையைக் கொண்டு வந்துள்ளன. அதன்படி தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 2 மில்லியன் பேரல்கள் அளவு அதிகரிக்கத் திட்டமிட்டு இருக்கின்றன. இப்படி கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும்போது பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தில் மாற்றம் வரலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
மேலும் இந்த புதிய உற்பத்தி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ஒபேக் கூட்டமைப்பு நாடுகள் தகவல் கூறப்பட்டு இருக்கிறது.