அனுமதி வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசியால் பாதிப்பா??? அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!!!
- IndiaGlitz, [Thursday,December 10 2020]
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசாங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து அவசரத் தேவைக்காக மட்டும் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடைமுறையில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.
அமெரிக்காவின் ஃபைசர்-பயோன்டெக் நிறுவனங்கள் இரண்டும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியது. இதனால் அந்நாட்டின் முன்களப் பணியாளர்கள், முதியவர்கள், நோய் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு இந்தத் தடுப்பூசியை செலுத்தும் பணி தொடங்கியது.
அப்படி ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 2 சுகாதாரப் பணியாளர்களர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர்களுக்கு மாற்று மருந்து செலுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்று பிரிட்டன் நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
மேலும், ஒரு சில மருந்துகள் உணவுகள் மற்றும் தடுப்பூசிகளில் ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் ஏற்படும் நபர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டாம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. தடுப்பூசி போடுவதால் சிலருக்கு இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என்றும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும் அந்நாட்டு விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து உள்ளனர். இதனால் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி தற்போது அந்நாட்டு மக்களுக்கு செலுத்தும் நடைமுறை மீண்டும் துவங்கி உள்ளது.