தமிழ்நாடு முழுவதிலும் டீக்கடைகளை மூட முதல்வர் ஈபிஎஸ் உத்தரவு

கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என பிரதமர் மோடி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் தனித்தனியே 144 தடை உத்தரவை அமல்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அத்தியாவசிய கடைகள் என்ற வகையில் பால், மருந்து பொருட்கள், காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ஒரு சில டீக்கடைகள் திறந்து இருக்கிறது என்பதும் அந்த டீக்கடைகளில் டீ குடிக்க வருபவர்கள் ஒருவருடன் ஒருவர் கூடி பேசி கும்பலை ஏற்படுத்தி வருவதாகவும் அரசுக்கு புகார்கள் வந்தன.

இதனை அடுத்து தேனீர் கடைகளில் தேவையற்ற கூட்டம் போடுவதை தவிர்க்க தமிழ்நாடு முழுவதும் உள்ள தேநீர்க் கடைகள் இயங்குவதற்கு இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இன்று இரவு 7 மணிக்கு முதல்வர் பழனிச்சாமி அவர்கள் மக்களிடம் உரையாற்றவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டீக்கடை என்றாலே டீ குடித்துவிட்டு மட்டும் மக்கள் செல்வதில்லை, டீக்கடையில் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசிக்கொண்டிருப்பதை தவிர்ப்பதற்காகவே முதல்வர் பழனிசாமி இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதாக கருதப்படுகிறது.