பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்- தமிழக முதல்வர் வேண்டுகோள்!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட தமிழக முதல்வர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 3,606 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை மொத்தம் 36 லட்சத்து 14 ஆயிரம் தடுப்பூசிகள் பெறப்பட்டு உள்ளது. இதில் 30.47 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் 5.6 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.

இதுவரை மொத்தமாக 11 லட்சத்து 25 ஆயிரத்து 703 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் கோவிஷீல்ட் தடுப்பூசியை 10 லட்சத்து 98 ஆயிரத்து 857 பேரும், கோவேக்சின் தடுப்பூசியை 26 ஆயிரத்து 846 பேரும் போட்டுக் கொண்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தற்போது நாம் பணி நிமித்தமாக அத்யாவசிய தேவைகளுக்காக ஏதேனும் நிகழ்வுகளுக்காக வெளியில் செல்கிறோம். இப்படியான நேரத்தில் நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்’‘ எனத் தெரிவித்தார். மேலும் கொரோனா தடுப்புக்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் அவர் செய்தியாளர்கள் முன்னிலையில் எடுத்துக் கூறினார்.