புல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை! 

  • IndiaGlitz, [Monday,February 18 2019]

புல்வாமா தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் 44 பேர் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தற்கொலைப்படை தாக்குதலால் பலியான நிலையில் மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி என அறிவித்துள்ளதால் பாகிஸ்தானில் இருந்து இனி எந்த பொருட்களும் இறக்குமதி செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிக்க தடைவிதித்து அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி பாகிஸ்தான் கலைஞர்களுடன் பணிபுரியும் நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் பாடகர்கள் பாடிய பாடல்களை இந்திய படங்களில் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தி திரைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியாகி நல்ல வசூலை பெற்று வந்த நிலையில் இனி பாகிஸ்தானில் எந்த இந்திய திரைப்படமும் திரையிடப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அஜய்தேவ்கான் நடித்த 'டோட்டல் தமால்' என்ற திரைப்படம் பாகிஸ்தானில் திரையிடப்படாது என அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டாம் என பிசிசிஐக்கு சிசிஐ வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது