அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம்....! பணி நியமனம் செய்தது தமிழக அரசு.....!
- IndiaGlitz, [Saturday,August 14 2021]
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தில் கீழ் சுமார் 58 அர்ச்சகர்களுக்கு பணி ஆணையை வழங்கினார் தமிழக முதல்வர் முக. ஸ்டாலின்.
இதற்காக பயிற்சி பள்ளியில் படித்து முடித்த 24 அர்ச்சகர்களுடன் சேர்ந்து, 58 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, அவர்கள் தமிழகத்தில் உள்ள சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோவில்களில் பணியாற்ற உள்ளனர். சென்னையில் துவங்கப்பட்ட இத்திட்டத்தில், சிறப்பு விருந்தினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,சாந்தலிங்க மருதாசல அடிகள்,குமரகுருபர சுவாமிகள் சிரவை ஆதீனம், ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுகி சிவம் மற்றும் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், கே என் நேரு, சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இத்திட்டத்தை கடந்த 1970-இல் அப்போதைய முதல்வரான கருணாநிதி கொண்டு வந்தார். ஆனால் அப்போது இருந்த பல சட்டவழக்குகள் காரணமாக இந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. இந்தநிலையில் கிட்டத்தட்ட 51 வருடங்கள் கழித்து திமுக அரசு தனது ஆட்சியில் இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.